பூண்டி நீர்த்தேக்கத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பூண்டியில் அமைந்துள்ளது சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம். சென்னை பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இந்த நிலையில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கான நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதேபோல், ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணையில் திறந்துவிடப்பட்ட உபரிநீர் மற்றும் கிருஷ்ணா கால்வாயில் மழை நீர் வரத்து போன்றவைகளால் நீர்மட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் உபரிநீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பூண்டி நீர்தேக்கத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலருமான ரா.ஆனந்தகுமார், மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இந்த மாவட்டத்தில் உள்ள சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம், உபரி நீர் திறப்பு, கொசஸ்தலை ஆற்றில் செல்லும் வழித்தடங்கள் தொடர்பான விவரங்களை வரைபட உதவியுடன் கொசஸ்தலை வடிநில கோட்டம் செயற்பொறியாளர் பொதுப்பணித் திலகம், உதவி செயற்பொறியாளர் ஜி.கார்த்திகேயன், உதவிப் பொறியாளர் ரமேஷ் ஆகியோர் விளக்கமாக எடுத்துரைத்தனர். இதையடுத்து, தற்போதைய நிலையில் நீர்வரத்து, இருப்பு விவரம் மற்றும் உபரி நீர் வெளியேற்றம் தொடர்பாக நேரில் சென்று ஆய்வு செய்தார்.  

Related Stories: