மோசடி மன்னனுக்கு உதவிய கேரள ஐஜி சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், ஆலப்புழா சேர்த்தலாவை சேர்ந்தவர் மோன்சன். கொச்சியில் பழங்கால அரிய புராதன பொருட்கள் இருப்பதாக கூறி போலியான பொருட்களை விற்பனை செய்து கோடிக்கணக்கில் பண மோசடி செய்தார். சமீபத்தில் அவரை போலீசார் கைது செய்தனர். முன்னாள் டிஜிபி லோக்நாத் பெகரா, ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாம், ஐஜி லெட்சுமணா, முன்னாள் டிஐஜி சுரேந்திரன் உள்பட பல போலீஸ் அதிகாரிகள், நடிகர்கள் மோகன்லால் மற்றும் அரசியல் வாதிகள் உள்பட பலரிடம் மோன்சன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தது தெரியவந்து இருக்கிறது. இவரிடம் பணிபுரிந்த ஒரு பெண் ஊழியரின் மகளையும் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இந்த நிலையில் போக்குவரத்து ஐஜி.யாக உள்ள லெட்சுமணாவுக்கு மோன்சனிடம் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது பற்றி  ஏடிஜிபி ஸ்ரீஜித் விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். இதையடுத்து, லெட்சுமணாவை சஸ்பெண்ட் செய்ய டிஜிபி அனில் காந்த் உத்தரவிட்டார். இதற்கு முதல்வர் பினராய் விஜயன் ஒப்புதல் அளித்துள்ளார்.

Related Stories: