முன்னறிவிப்பு ஏதுமின்றி இரவில் ஏரிகளில் தண்ணீர் திறக்கப்படாது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்

சென்னை: முன்னறிவிப்பு ஏதுமின்றி இரவில் ஏரிகளில் தண்ணீர் திறக்கப்படாது என்றுஅமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார். வருவாய் மற்றும்  பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று  சென்னை, எழிலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: வங்கக்கடலில்  உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக கடந்த 24 மணி  நேரத்தில், 37 மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. மாநிலத்தின் சராசரி மழை  அளவு 27.10 மி.மீட்டர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 271.68  மி.மீட்டர் பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழை 1.10.2021 முதல் 10.11.2021  வரை 388.10 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 255.2 மி.மீட்டரை விட  52 சதவீதம் கூடுதல் ஆகும்.

தமிழ்நாட்டில் முக்கியமான 90  நீர்த்தேக்கங்களில் 53 நீர்த்தேக்கங்கள் 76 சதவீதத்திற்கு மேலாக  நிரம்பியுள்ளன. 14,138 ஏரிகளில் 9,153 ஏரிகள் 50 சதவீதத்திற்கு மேலாக  நிரம்பியுள்ளன. இவற்றுள் 3,691 ஏரிகள் 100 சதவீதத்திற்கு மேலாக  நிரம்பியுள்ளன. வங்கக்கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற 33,773 படகுகள்  பத்திரமாக கரை சேர்ந்துள்ளன.தமிழகத்தில் பெய்த மழைக்கு நேற்று  முன்தினம் மட்டும் 3 பேர் இறந்துள்ளனர். வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்ற  33,773 படகுகள் பத்திரமாக கரை சேர்ந்துள்ளது. தமிழகத்தில் அபாயகரமாக உள்ள  நீர்நிலைகள் கண்டறியப்பட்டு கூடுதல் மீட்பு குழுக்கள் அங்கு தயார் நிலையில்  வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள்பாதுகாப்பை கருத்தில் கொண்டு,  முன்னறிவிப்பு ஏதுமின்றி இரவில் ஏரிகள் திறக்கப்படாது. பகல் நேரத்தில்  மட்டுமே தண்ணீரை திறக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு  உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேவையில்லாமல் இன்று வெளியே வர வேண்டாம்.

கடலோர பகுதியில் 425 எச்சரிக்கை கருவிகள் (சைரன்) வைக்கப்பட்டுள்ளது. இதை  மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையம் மற்றும் அந்தந்த மாவட்ட கலெக்டர்  அலுவலகத்தில் இருந்து எச்சரிக்கை மணியை அடிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.  தற்போது பெய்யும் மழைக்கு தண்ணீர் பாதிப்பு எங்கு அதிகம் ஏற்படுகிறது என்று  கணக்கெடுக்க கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில்  இதுபோன்று அந்த பகுதியில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை  எடுக்கப்படும். சென்னை மாநகராட்சி பகுதியில் 1,343 பேர் 22  நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 13,39,670 உணவு  பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. மழை நீர் தேங்கியுள்ள 400 பகுதிகளுள், 240  பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் ராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டுள்ளது.  எஞ்சிய 160 பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று  வருகிறது. மழை நீரால் சூழப்பட்டுள்ள 16 சுரங்கப்பாதைகளில், 15  சுரங்கப்பாதைகளில் மழை நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 1  சுரங்கப்பாதையில் மழை நீர் வெளியேற்றும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.  சாலைகளில் விழுந்த 116 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர்  செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,265 மருத்துவ முகாம்கள் மூலம் 38,780 பேர்  பயனடைந்துள்ளனர்.

மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்க 46  படகுகளும், மழை நீரை வெளியேற்ற 46 ஜே.சி.பி.களும், 325 ராட்சத பம்புகளும்  பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 7,180 புகார்கள் வரப்பெற்று, 3,593 புகார்கள்  தீர்வு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய புகார்களின் மீது துரித நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு  அலுவலர்கள் நியமிக்கப்பட்டு தொடர்புடைய மாவட்டங்களில் முகாமிட்டு மீட்பு,  நிவாரணம் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அனைத்து மாவட்டங்களிலும்  ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களுடன் மீட்பு மற்றும்  நிவாரண பணிகளை மேற்கொள்ள 12 மூத்த இந்திய காவல் பணி அலுவலர்கள் கூடுதலாக  நியமிக்கப்பட்டுள்ளனர்.

பேரிடர் மேலாண்மையில் தன்னார்வலர்களை  ஈடுபடுத்தும் வகையில் நீச்சல் தெரிந்தவர்கள் 19,547, மரம் அறுக்க  தெரிந்தவர்கள் 15,912, பாம்பு பிடிப்பவர்கள் 3,117, கால்நடைகளின்  பாதுகாப்பிற்காக 19,535 என சுமார் 1.05 லட்சம் தன்னார்வலர்கள்  கண்டறியப்பட்டு பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு  வருகின்றனர். நீண்டகால தணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சென்னை  மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம்,  முடிச்சூர், செம்பாக்கம், கோவிளம்பாக்கம், ஆதம்பாக்கம் பகுதிகளில் வெள்ள  தடுப்பு பணிகளும், 11 கடலோர மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுவதை தடுக்கும்  பணிகளும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நகராட்சி  பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகளும் ரூ.513.78 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள  ஒப்புதல் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில்  மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் 1070, மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையங்கள்  1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.  மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913  என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ் அப் எண்  9445869848 மூலமாகவும் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது  வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர்  மேலாண்மை துறை செயலாளர் குமார்ஜெயந்த், நில நிருவாக ஆணையர் நகராஜன்,  பேரிடர் மேலாண்மை இயக்குநர் சுப்பையன் ஆகியோர் உடனிருந்தனர்.

100 நிவாரண முகாம்கள்

மழை பாதிப்பு காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 3,154  பேர் 100 நிவாரண  முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 3,670 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு படையின் 8 குழுக்கள், அதாவது கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தலா ஒரு குழுவும், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மணலி பகுதிக்கு மூன்று குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் இரண்டு குழுக்கள் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார்.

Related Stories: