சென்னை அரசு பொது மருத்துவமனை டெங்கு காய்ச்சல் வார்டில் மத்திய குழு ஆய்வு

சென்னை: சென்னை அரசு பொது மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு காய்ச்சல் வார்டை மத்திய குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது டெங்கு காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர். இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, பஞ்சாப், அரியானா, கேரளா தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாகவுள்ளது. கடந்த ஜனவரி முதல் இதுவரை 7 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 3 ஆயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 500 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் தினமும் சராசரியாக 20 அல்லது 30 பேர் டெங்குவால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டியாவின் ஆலோசனையின்படி மருத்துவர் ரோஷினி ஆர்த்தர், மருத்துவர் நிர்மல் ஜோ, மருத்துவர் ஜான்சன் அமலா ஜாஸ்மின் ஆகியோர் கொண்ட மத்திய குழுவினர் டெங்கு பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுக்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

அதன்படி, நேற்று முன்தினம் தமிழகம் வந்த அந்த குழுவினர் ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு சென்று ஆய்வு  மேற்ெகாண்டனர். அதைத் தொடர்ந்து நேற்று சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சென்று மத்திய குழுவினர் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கொசு வலைகளுடன் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டுகளை பார்வையிட்டனர். டெங்குவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் சென்னையில் உள்ள மற்ற அரசு மருத்துவமனைகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர்.

Related Stories: