கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளம் போல் காட்சி அளிக்கும் மெரினா கடற்கரை!: அசம்பாவிதங்களை தடுக்க பொதுமக்களுக்கு தடை..!!

சென்னை: கனமழை காரணமாக வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை கொட்டி வரும் நிலையில், மெரினா கடற்கரை மணற்பகுதி முழுவதும் நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மணற்பரப்பே தெரியாத அளவிற்கு கடற்கரை முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. மணற்பரப்பில் தேங்கியுள்ள மழைநீரை பொக்லைன் இயந்திரங்களுடன் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதனிடையே மெரினாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகர ஆயுதப்படை, கடலோர பாதுகாப்புக் குழும போலீஸ், தீயணைப்புத்துறை வீரர்கள், மீனவர்கள் என ஒரு ஷிப்டுக்கு 45 பேர் வீதம் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையொட்டி சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் ராஜேந்திரன் மற்றும் திருவெல்லிக்கேணி துணை ஆணையர் பகலவன் ஆகியோர் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் விதமாக பொதுமக்கள் கடற்கரைக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: