பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் நெற்பயிர் காப்பீட்டை 15ம் தேதிக்குள் செய்ய வேண்டும்: வேளாண்மை உற்பத்தி ஆணையர் தகவல்

சென்னை: பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், வரும் 15ம் தேதிக்குள் விவசாயிகள் நெற்பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என வேளாண்மை உற்பத்தி ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வெளியிட்ட அறிக்கை: எதிர்பாராது நிகழும் இயற்கைப் பேரிடர்களினால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி விவசாயிகளை பாதுகாத்து, அதன் மூலம் பண்ணை வருவாயை நிலைப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் 2021 - 2022ம் ஆண்டில் செயல்படுத்துவதற்கான அரசாணையினையும் நிதியினையும் வழங்கி உள்ளது.

தற்போது அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் சம்பா, தாளடி, பிசான பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெற்பயிரை முழு வீச்சில் காப்பீடு செய்து வருகின்றனர். இதுவரை, 5.65 லட்சம் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு 6.91 லட்சம் ஏக்கர் பயிர் பரப்பு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.  சம்பா, தாளடி, பிசான நெற்பயிரை காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ,பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சம்பா பருவத்தில் நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு கடைசி நாள் 15.11.2021 ஆகும்.

கன்னியாகுமரி, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களைப் பொறுத்தவரை இதற்கான கடைசி நாள் 15.12.2021 ஆகும். தற்போது தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பெய்துவரும் வடகிழக்குப் பருவ மழையினால், நெற்பயிர் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே இதுவரை இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யாத விவசாயிகள் அனைவரும் வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் அல்லது பொது சேவை மையங்கள் மூலமாக உடனடியாக பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: