திருப்பத்தூர் மாவட்டத்தில் தவித்த இருளர் இன குடும்பங்கள் தினகரன் நாளிதழில் செய்தி வெளியான 1 மணி நேரத்தில் மின் இணைப்பு, சாதிச்சான்று: முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டருக்கு பாராட்டு

சென்னை: திருப்பத்தூர் மாவட்டத்தில் மின்சார வெளிச்சத்தை பார்க்காத இருளர் இன குடும்பங்கள் என்பது தொடர்பாக  தினகரன்  நாளிதழில் செய்தி வெளியான 1 மணி நேரத்தில் தொகுப்பு வீடு, மின் இணைப்பு, சாதிச்சான்று வழங்கப்பட்டது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட கலெக்டருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே தொப்பளா கவுண்டனூர் (சின்னூர் பங்களா) கிராமத்தில் இருளர் இன மக்கள் 20 குடும்பங்கள் பல ஆண்டுகளாக குடிசையில் வசித்து வருகின்றனர். இவர்கள் அடிப்படை வசதிகளை கோரி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போதைய அரசு மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், சம்பந்தப்பட்ட மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் எ.வ.வேலுவிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி அமைச்சர் எ.வ.வேலு  திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் மாலை 6 மணிக்குள் இதுதொடர்பாக அறிக்கை அனுப்ப உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து அந்த கிராமத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் சார் ஆட்சியர், வட்டாட்சியர், பஞ்சாயத்து உதவி இயக்குனர், மின்வாரிய செயற்பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதில் அந்த இடம் ரயில்வேக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதில், வசிக்கும்  20 குடும்பங்களில் 27 ஆண்கள், 30 பெண்கள், 25 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு குமுடிகருமேல்படி அருகே கல்வெட்டு குழி என்கிற இடத்தில் இலவசமாக நிலம் தரவும், தொகுப்பு வீடுகள் கட்டிதருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதுவரை இந்த பகுதியில் தற்காலிகமாக மின் இணைப்பு தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். 20 குடும்பங்களும் கூட்டு குடும்பமாக 10 வீடுகளில் வசித்து வருவதால், 8 ரேஷன் கார்டுகள் மட்டுமே உள்ளது. 2 குடும்பங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரேஷன் அட்டை வைத்துள்ளனர்.

மேலும், 8 ரேஷன் அட்டைகளில் அனைத்து நபர்களின் பெயர்களும் இடம் பெற்று அவர்களுக்குரிய அத்தியாவசிய பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 2 நாளில் ஆதார் அட்டை வழங்க  உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உடனடியாக பழங்குடியினர் சாதிசான்று வழங்கப்பட்டது. அருகில் உள்ள ஊர்களில் இருந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டித்தரப்பட்ட 17 கழிப்பிடங்கள் உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.   11 குழந்தைகள் கந்திலி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். 11 பேருக்கு, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மூலம் வேலை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்களுக்கு 2 நாட்களில்  வங்கி கணக்கு தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

தினகரன் நாளிதழில் செய்தி வெளியான 1 மணி நேரத்திலேயே இருளர் இன மக்களுக்கு தொகுப்பு வீடு கட்டவும், சாதிச்சான்று, ஆதார் அட்டை, வீடுகளுக்கு தற்காலிக மின் இணைப்பு வழங்கவும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அந்த மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். கடந்த அதிமுக ஆட்சியில் மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத நிலையில், தற்போது தினகரன் நாளிதழில் செய்தி வெளியானதும் மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கும், செய்தியை வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும்  இருளர் இன மக்கள் நன்றி தெரிவித்தனர்.  இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுத்ததற்காக அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட கலெக்டர் ஆகியோரை முதல்வர் மு.க.ஸ்டாலின்  பாராட்டினார்.

Related Stories: