ஆவடி மாநகராட்சியில் தெருக்கள், வீடுகளில் தேங்கிய மழைநீர் மோட்டார்கள் மூலம் அகற்றம்: அமைச்சர் நாசர் அதிரடி நடவடிக்கை

ஆவடி: ஆவடி மாநாகராட்சி பகுதியில் தொடர் மழையால் தெருக்கள், வீடுகளில் தேங்கிய தண்ணீரை பால் வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசரின் அதிரடி உத்தரவின் பேரில் அதிகாரிகள் டீசல் மோட்டார்கள், பொக்லைன் மூலம் அகற்றினர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை மழை தொடர்ந்து பெய்தது. இதனால் முக்கிய பிரதான சாலைகள், தெருக்களில் தண்ணீர் ஆறாக ஓடியது. மேலும், வீடுகளை சூழ்ந்து மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

குறிப்பாக, ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வசந்தம் நகர், ஸ்ரீராம் நகர், நேரு நகர் திருமுல்லைவாயல் பகுதியான சரஸ்வதி நகர் தென்றல் நகர், பாரதி நகர், பட்டாபிராம் பகுதியான மேற்கு கோபாலபுரம், முல்லை நகர், சித்தேரிகரை, கவரபாளையம், சிந்துநகர் இமானுவேல் தெரு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. மேலும், சில வீடுகளை சூழ்ந்து தண்ணீர் நின்றது. இதோடு மட்டுமில்லாமல், தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. தகவலறிந்து ஆவடி தொகுதி எம்.எல்.ஏவும், பால் வளத்துறை அமைச்சருமான ஆவடி சா.மு.நாசர் மேற்கண்ட பகுதிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் சிவகுமார், பொறியாளர் வைத்திலிங்கம், உதவி பொறியாளர் சத்தியசீலன், திமுக மாநகர செயலாளர் ஜி.ராஜேந்திரன் ஆகியோருடன் விரைந்து வந்து பார்வையிட்டார்.

பின்னர், அதிகாரிகள்  டீசல் மோட்டார்கள், பொக்லைன் இயந்திரம் மூலம் தெருக்கள், வீடுகளை சுற்றி தேங்கிய மழைநீரை அப்புறப்படுத்தும் பணி விரைந்து நடைபெற்றது. இதோடு மட்டுமில்லாமல், சேக்காடு ஏரி நிறைந்தால் உபரிநீர் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெளியேற்றம் செய்யப்பட்டது. மேலும், அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கருக்கு டி.டி.பி காலனி ஆகிய இடங்களில் தெருக்களில் தண்ணீர் அதிக அளவு தேங்கி வீடுகளுக்குள் புகுந்தது.

மேலும், கொரட்டூர் பகுதியான அக்ரகாரம், சீனிவாசபுரம் சிவலிங்கபுரம், லேக் வியூ கார்டன், பவானி அம்மன் நகர், மாதானங்குப்பம், கள்ளிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் ஆறாக ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. கொரட்டூர் சுரங்கப்பாதையில் தண்ணீர் அதிக அளவு சென்றதால், வாகன ஓட்டிகள் செல்லமுடியவில்லை. இதோடு மட்டுமல்லாமல், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் தண்ணீர் புகுந்ததால் காவல் நிலைய பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும், இதே பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் மரக்கிளைகள் முறிந்து கீழே விழுந்தன.

அம்பத்தூரில் இருந்து கொரட்டூர் செல்லும் தொழிற்பெட்டை சாலை, கருக்கு மெயின் ரோடு ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் செல்லமுடியாமல் சிரமப்பட்டனர். தகவலறிந்து அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர், அதிகாரிகள் மின்மோட்டார், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்ணீர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், ஆவடி, அம்பத்தூர் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

Related Stories: