தீபாவளி தொடர் விடுமுறை களை கட்டியது: ஊட்டியில் 3 நாளில் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்: வியாபாரிகள் மகிழ்ச்சி

ஊட்டி, நவ.7: தீபாவளி  பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்கள் என தொடர்ந்து 4 நாட்கள்  விடுமுறை கிடைத்த நிலையில் ஊட்டிக்கு கடந்த 3 நாட்களில் 30 ஆயிரம் பேர் வந்துள்ளனர். நீலகிரி  மாவட்டத்திற்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.  குறிப்பாக, விடுமுறை நாட்கள், பண்டிகை விடுமுறை நாட்கள் மற்றும் தொடர்  விடுமுறை நாட்களின்போது ஊட்டிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது  வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பியே நீலகிரி மாவட்டத்தில்  பலரும் தொழில் செய்து வருகின்றனர். லாட்ஜ், காட்டேஜ், ரிசார்ட் மற்றும்  ஓட்டல்கள் போன்றவைகளை வைத்துள்ளவர்கள் சுற்றுலா பயணிகளை நம்பியே உள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரமே சுற்றுலா பயணிகளை நம்பியே உள்ளது. இந்நிலையில், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு நாடு  முழுவதும் பரவ துவங்கியது. இதனால், பல மாதங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டத்தால், பல தொழில்களும் பாதிக்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம்  சுற்றுலா தொழிலை நம்பி இருந்ததால் பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டன. ஓட்டல்கள்,  லாட்ஜ்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், வழிகாட்டிகள், சாலையோர வியாபாரிகள்  என பலரும் பாதிக்கப்பட்டனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எதிர்பார்த்த  அளவிற்கு சுற்றுலா பயணிகள் வராத நிலையில் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள்  திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது. மேலும், வெளியூர்கள் மற்றும் வெளி  மாநிலங்களில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு  அனுமதிக்கப்பட்டது. இதனால், கடந்த 2 மாதங்களாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா  பயணிகள் எண்ணிக்கு அதிகரிக்க துவங்கியுள்ளது. கடந்த மாதம் ஆயுதபூஜை  விடுமுறை, வார விடுமுறை மற்றும் கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகை விடுமுறை  வந்த நிலையில் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடந்த ஒன்றரை  ஆண்டுகளுக்கு பின் ஆயுத பூஜை விடுமுறையின்போது ஊட்டிக்கு கடந்த 3  நாட்களில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மேற்பட்ட சுற்றுலா பயணிகள்  வந்துள்ளனர்.  இதனால், நீலகிரி மாவட்டம் முழுவதும் குறிப்பாக  ஊட்டியில் சுற்றுலா பயணிகளை நம்பி தொழில் செய்யும் பலரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகை விடுமுறை மற்றும் வார விடுமுறை என 4  நாட்கள் விடுமுறை வந்த நிலையில், தற்போது ஊட்டிக்கு தினமும் பல ஆயிரம்  சுற்றுலா பயணிகள் வந்தனர். தீபாவளி தினத்தன்று 9 ஆயிரத்து 736 பேரும்,  நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 10 ஆயிரத்து 620 பேரும் வந்திருந்தனர்.

நேற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் என மூன்று நாட்களில்  30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால்,  பல்வேறு சாலைகளிலும் நேற்று வாகன நெரிசல் காணப்பட்டது. மேலும், சுற்றுலா  தலங்களுக்கு செல்லும் சாலைகள், நடைபாதைகள் என எங்கு பார்த்தாலும் மக்கள்  கூட்டம் அலைமோதியது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா  படகு இல்லம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர். ஊட்டி  படகு இல்லம், பைக்காரா படகு இல்லத்தில் வெகு நேரம் காத்திருந்து சுற்றுலா  பயணிகள் படகு சவாரி மேற்கொண்டனர். இதேபோல், சாலையோரங்களில் உள்ள  காய்கறி கடைகள், கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் நேற்று  மக்கள் கூட்டம் கூடியதாக வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.இன்றும் பல  ஆயிரம் பேர் வர வாய்ப்புள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் தற்போது ஊட்டிக்கு  வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இங்குள்ள  வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: