சொத்து குவிப்பு வழக்கில் முடக்கப்பட்ட நிரந்தர வைப்புநிதியை விடுவிக்க கோரிய வேலுமணியின் உறவினர் மனு தள்ளுபடி: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான சொத்து குவிப்பு வழக்கில் முடக்கம் செய்யப்பட்ட அவரின் உறவினர் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரரின் நிரந்தர வைப்பு நிதி 5 கோடியே 60 லட்சம் ரூபாயை விடுவிக்க கோரி தொடரப்பட்ட மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு, அலுவலகம் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரொக்கப்பணம் மற்றும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த போது சென்னை, கோவை மாநகராட்சியில் டெண்டர் பணிகளை மேற்கொண்ட திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் செயல்படும் எஸ்.பி.வேலுமணியின் உறவினரான பி.எஸ்.லோகநாதன் என்பவர் பங்குதாரராக உள்ள மெட்ராஸ் இன்ஃப்ரா என்ற நிறுவனத்தின் பெயரில் கோவையில் உள்ள கர்நாடக வங்கியில் இருந்த கணக்கு மற்றும் நிரந்தர வைப்புத்தொகை,  பி.எஸ்.லோகநாதனின் வங்கி கணக்கு, நிரந்தர வைப்பு நிதி ஆகியவற்றை முடக்கம் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில், தங்கள் நிறுவனத்தின் பெயரில் உள்ள 4 கோடியே 95 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்பு நிதியை விடுவிக்க உத்தரவிட கோரி மெட்ராஸ் இன்ஃப்ரா நிறுவனத்தின் பங்குதாரர் பி.எஸ்.லோகநாதன் சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், இந்த வழக்குக்கும், தங்கள் நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை. சட்டப்பூர்வ வருமானம் மூலம் கிடைத்த பணத்தை தான் வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையாக வைத்துள்ளோம். மெட்ராஸ் இன்ஃப்ரா நிறுவனத்தில் பணியாற்றி வரும் 769 பேருக்கு சம்பளம், போனஸ் வழங்க வேண்டியதுள்ளது. கடனுக்கான வட்டி, கடன் பெற்றவர்களுக்கு தர வேண்டிய தொகை ஆகியவற்றை வழங்க வேண்டியுள்ளது. எனவே, நிரந்தர வைப்பு நிதியை விடுவிக்க வேண்டும். தனது பெயரிலான வங்கி கணக்கில் உள்ள 65 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்பு நிதியையும் விடுவிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ், வங்கி கணக்கு பண பரிமாற்றம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பிய போதும் மனுதாரர் நேரில் ஆஜராகவில்லை. மனுதாரரின் வங்கி கணக்கில் குறுகிய காலத்தில் அதிகளவில் பணம் வந்தது ஆகியவை குறித்த விசாரணை நிலுவையில் உள்ளது. எனவே, மனுதாரர் நிறுவனத்துக்கும், இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இல்லை என்பதை ஏற்க முடியாது எனக்கூறி பி.எஸ்.லோகநாதனின் மனுவை தள்ளுபடி செய்தார்.

Related Stories: