டிடிசிபி மூலம் கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி பெற மாவட்ட வாரியாக எல்லை வரையறை: தமிழக அரசு உத்தரவு

சென்னை: டிடிசிபி மூலம் கட்டிடங்களுக்கான திட்ட அனுமதி பெற மாவட்ட வாரியாக எல்லை வரையறை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையை தவிர்த்து தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கட்டுமான திட்ட அனுமதி, பணி நிறைவு சான்றிதழ் டிடிசிபி மூலம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இதில், சென்னையை தவிர மற்ற பகுதிகளில் 7 ஆயிரம் சதுர அடி வரையும், 8 வீடுகள் கொண்ட அதே நேரம் 12 மீட்டர் மிகாத கட்டிடங்கள், தரைதளம் உட்பட 3 தளங்கள் கொண்ட கட்டிடத்துக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் 10 ஆயிரம் சதுர அடிக்கு மேலான கட்டிடங்கள் என்றால் டிடிசிபி மூலம் தான் சென்னையில் உள்ள அலுவலகங்களுக்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டிய நிலை இருந்தது. இதனால், மற்ற மாவட்டங்களில் கோப்புகள் கொண்டு வரும் போது சில நேரங்களில் பரிந்துரைகளுக்காக திருப்பி அனுப்பபட்டு வந்தது. இதனால், திட்ட அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் மாவட்ட வாரியாக டிடிசிபி உதவி இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் மூலம், தற்போது திட்ட அனுமதி பெற்று கொள்ள முடியும். இதற்காக மாவட்ட வாரியாக எல்லை மறுவரையறை செய்து வீட்டு வசதித்துறை செயலாளர் ஹீத்தேஷ் குமார் எஸ். மேக்வானா உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்துக்குட்பட்ட செங்கல்பட்டு செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், வண்டலூர், திருப்போரூர் ஆகிய பகுதிகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், வாலாஜபாத் ஆகிய பகுதிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு, பொன்னேரி, பூந்தமல்லி, ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, சென்னை மாவட்டத்தில் ஆலந்தூர், அம்பத்தூர், அமைந்தகரை, அயனாவரம், எழும்பூர், கிண்டி, மாதவரம், மதுரவாயல், மாம்பலம், மயிலாப்பூர், பெரம்பூர், புரசைவாக்கம், சோழிங்கநல்லூர், திருவொற்றியூர், தண்டையார் பேட்டை, வேளச்சேரி ஆகிய பகுதிகளும், திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ராதாபுரம், சேரன்மகாதேவி, திசையன் விளை ஆகிய பகுதிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், கோவில்பட்டி, சாத்தான் குளம், ஏரல், எட்டயாபுரம், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், கயத்தார் ஆகிய பகுதிகள் எல்லையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று மற்ற மாவட்ட வாரியாக எல்லைகள் வரையறுக்கப்படுகிறது.

இது குறித்து அகில இந்திய கட்டுனர் சங்க பொதுச்செயலாளர் ராமபிரபு கூறுகையில், ‘கடந்த காலங்களில் திட்ட வரையறுக்கப்படாத பகுதி என்று குறிப்பிடுவதால், அனுமதி பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தது. தற்போது, மாவட்ட எல்லை வரையறுக்கப்பட்டுள்ளதால், திட்ட அனுமதி பெறுவது சுலபம். மேலும், மாவட்ட வாரியாக உதவி இயக்குனர் மூலம் விரைவில் அனுமதி பெற்றுக்கொள்ள முடியும்’ என்றார்.

Related Stories: