ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் மூலம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.300 கோடியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை: ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தின் மூலம் ரூ.300 கோடியில், திருச்செந்தூர் முருகன் கோயிலில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழனி தண்டாதயுபாணி சுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகிய 3 கோயில்களை திருப்பதி கோயிலுக்கு இணையாக மேம்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து, திருச்செந்தூர், பழனி, சமயபுரம் ஆகிய 3 கோயில்களில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை, தங்கும் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தொடர்பாக ‘மாஸ்டர் பிளான்’ தயாரிக்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பேரில், அந்த நிறுவனம் சார்பில், 3 கோயில்களில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பாக ‘மாஸ்டர் பிளான்’ தயாரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையில் சமர்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ.300 கோடியில் ஒருங்கிணைந்த பெருந்திட்டத்தை (மாஸ்டர் பிளான்) செயல்படுத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, எம்பி கனிமொழி, தலைமை செயலாளர் இறையன்பு, முதன்மை செயலாளர் சந்தரமோகன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், கோயிலில் மேற்கொள்ளப்படவுள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து வீடியோ மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது, கோயிலில் தங்கும் விடுதிகள், அன்னதானக் கூடம், முடி காணிக்கை செலுத்தும் இடம், வியாபார கடைகள், தீயணைப்பு வாகனம் நிறுத்துமிடம், அவசர ஊர்தி, யானைகள் பராமரிப்பு கொட்டகை, வாகனம் நிறுத்துமிடம் போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், அங்கபிரதக்ஷனம் செய்யும் பக்தர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருக்காமல், திருப்பதியை போன்று குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

கோயிலை சுற்றி எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் ராஜகோபுரம் தெரியும் அளவிற்கு கட்டிடங்கள் கட்டுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்னதானக் கூடம் கீழ்தளம், முதல்தளம் என 1000 பேர் ஒரே நேரத்தில் உணவருந்தும் அளவிற்கு திட்டங்கள் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் காத்திருக்கும் அறையில், தொலைக்காட்சி, கழிப்பறை, குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. அர்ச்சகர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. கோயிலை சுற்றியுள்ள பனை பொருட்கள், கடல் சார் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தற்போது உள்ள கடைகளைவிட அதிகளவில் விற்பனை கடைகள் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

Related Stories: