வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், தீயணைப்பு மீட்பு குழுவினர் 8,462 பேர் தயார்: அவசர உதவிக்கான தொலைபேசி எண்கள் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அறிவிப்பு

சென்னை: தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குநர் வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவமழை ஏற்படும் பேரிடரை எதிர்கொள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் அனைத்து நிலையங்களும் உபகரணங்களுடன் முழு வீச்சில் 24 மணி நேரம் செயல்படும் வகையில் தயார் நிலையில் உள்ளது. மேலும், வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதிகளில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்க ரப்பர் மற்றும் மோட்டார் படகுகள், சாலைகளில் விழும் மரங்களை அகற்ற மின்விசை ரம்பங்கள், குடியிருப்புகளை சூழ்ந்துள்ள நீரினை வெளியேற்ற நீர் இறைக்கும் பம்புகள், ஜெனரேட்டர், எமர்ஜென்சி லைட் மற்றும் மீட்புப் பணிக்கான கயிறுகள், லைப் பாய், லைப் ஜாக்கெட் உள்ளிட்ட அனைத்து செயற்கருவிகள் தயார் நிலையில் உள்ளன.

அனைத்து மாவட்டங்களிலும் திறன்மிக்க தீயணைப்பு நீச்சல் வீரர்கள்  மற்றும் கயிறு மூலம் மீட்புப்பணி மேற்கொள்ள பயிற்சி பெற்ற வீரர்கள் என இரு கமாண்டோ படைகள் பேரிடரை எதிர்கொள்ள முழுவீச்சில் தயார் நிலையில் உள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை அடையாளம் காட்டும் கருவிகள் ரோப் லான்சர், ரோப் ரைடர் மற்றும் தெர்மல் இமேஜிங் கேமரா ஆகியவை தயார் நிலையில் உள்ளன. வெள்ள காலங்களில் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் பொருட்டு தகவல்தொடர்பு சானதங்களான வாக்கி டாக்கி  போன்றவை தயார் நிலையில் உள்ளன.

மாநிலம் முழுவதும் தன்னார்வலர்களை கொண்ட தீயணைப்பு மீட்பு குழுவினர் 8462 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு பேரிடர் காலங்கள் மற்றும் தீவிபத்து மற்றும் மீட்புப்பணி அழைப்புகளில் பயன்படுத்தத்தக்க வகையில் தயார் நிலையில் உள்ளது. அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டுப்பாட்டு அறை 101, 112, மற்றும் தீ செயலி, மாநில பேரிடர் கட்டுப்பாட்டு அறை - 1070, 94458 69843, மருதம் கட்டுப்பாட்டு அறை - 044-24331074, 24343662.

Related Stories: