வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் போதிய வெயில் இல்லாததால் அகல் விளக்கு உற்பத்தி பாதிப்பு-தொழிலாளர்கள் கவலை

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் தொடர் மழையால் உலர வைப்பதற்கு உகந்த வெயில் இல்லாமல் அகல் விளக்கு உற்பத்தி பாதிப்படைந்துள்ளதாக மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மண் பாண்டத் தொழிலாளர்கள் சீசனுக்கு ஏற்ப தேவைப்படும் கலைநயமிக்க பொருட்களை வடிவமைத்து விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக, பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் பானைகள், கோயில் திருவிழாக்களின்போது குதிரை, யானை மற்றும் தெய்வங்களின் சிலைகள், விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகர் சிலைகள் போன்றவற்றை விதவிதமாக வடிவமைத்து விற்பனை செய்கின்றனர்.

இதில் விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து, கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக அகல் விளக்குகளை பெருமளவில் உற்பத்தி செய்வர். ஆனால், தற்போது வடகிழக்கு பருவ மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழை பெய்து வருவதால் அகல் விளக்குகள் தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர தற்போது வெயிலும் குறைந்துள்ளது. இதனால் அகல் விளக்கு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது: கார்த்திகை தீபம் என்றாலே முதலில் ஞாபகம் வருவது அகல் விளக்கும்தான். அகல் விளக்குகளின் தயாரிப்பு பணிக்கு வெயில் மிகவும் அவசியம். ஆனால், தற்போது பெரும்பாலும் வானம் மேக மூட்டமாகவே காணப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இடை இடையே விட்டு விட்டு மழையும் பெய்து வருகிறது.

இதனால் உற்பத்தி பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, களி மண்ணில் தயாரிக்கப்பட்ட அகல் விளக்குகளை உலர வைக்கத் தேவையான வெயில் இல்லை. இதனால், நடப்பாண்டில் அகல்விளக்குகளின் விலை சற்று உயரும் என்று எதிர்ப்பாக்கப்படுகிறது. குறிப்பாக, கார்த்திகை அகல்விளக்குகளை உருவாக்கவோ, உருவாக்கியதைக் காய வைக்கவோ முடியவில்லை.

இங்கு தயாரிக்கப்படும் விளக்குகள், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு இன்னும் 13 நாட்களே உள்ளது. இன்னும் சில நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் எதிர்பாக்கப்படுவதால், இனிமேல் அதிக அளவில் அகல் விளக்குகளை தயாரிக்க முடியுமா? என்பது சந்தேகம் தான். மழையால் எங்கள் தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: