நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு அரங்கம் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

சென்னை: நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கில் மேம்பாடு பணிகளை சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று ஆய்வு செய்தார். டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தில் உள்ள விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள், சுகாதார கழிப்பிடங்கள் மற்றும் நடைப்பயிற்சி பகுதிகளை மாண்புமிகு சுற்றுசூழல், கால நிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.எழிலன் நாகநாதன் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ளும் வீரர், வீராங்கனைகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும், சுகாதாரமான முறையில் கழிப்பிட வசதிகளை பராமரித்திடவும் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் காலங்களில் பார்வையாளர்கள் அமரும் இருக்கைகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் ஆயிரம்விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். எழிலன் நாகநாதன் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்பவர்களுக்காக உரிய மின்விளக்கு வசதிகளை மேம்படுத்திடவும், நடைப்பயிற்சி பாதையினை மேம்படுத்திடவும் கேட்டுக்கொண்டதை அடுத்து கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

அங்குள்ள இரண்டு உடற்பயிற்சி கூடங்களை பார்வையிட்ட அமைச்சர் அனைத்து தரப்பு மக்களும் உடற்பயிற்சி கூடங்களை பயன்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். எழிலன் நாகநாதன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணை பொது மேலாளர் சாமுவேல் ராஜா டேனியல், மண்டல முதுநிலை மேலாளர் மெர்சி ரெஜினா, முதுநிலை மேலாளர் ராமசுப்ரமணிய ராஜா மாவட்ட செயலாளர் சிற்றரசு பகுதி செயலாளர்கள் அன்புத்துரை, அகஸ்டின் பாபு உடன் இருந்தனர்.

Related Stories: