சென்னை விமான நிலையம் வழியாக ஹஜ் பயணம் மேற்கொள்ள நடவடிக்கை: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

சென்னை: சென்னை விமான நிலையம் வழியாக ஹஜ் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா பெருந்தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஹஜ் புனிதப் பயணம் நடைபெறவில்லை. 2022ம் ஆண்டில் பயணம் மேற்கொள்ள விழைவோர், விண்ணப்பம் செய்வதற்கான இணையதளங்களை, ஒன்றிய அரசின் ஹஜ் கமிட்டி அறிவித்து இருக்கிறது. வழக்கமாக, இந்தியாவின் 20 விமான நிலையங்களில் இருந்து, ஹஜ் பயணிகள் பயணம் மேற்கொள்வர். ஆனால், அந்த எண்ணிக்கையை பத்தாக குறைத்து விட்டனர். சென்னை விமான நிலையத்தின் பெயர், பட்டியலில் இல்லை.

தமிழ்நாடு மட்டும் அல்லாது, புதுச்சேரி மற்றும் அந்தமான் முஸ்லிம்களும், சென்னை விமானநிலையத்தின் வழியாகவே ஹஜ் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் இனி, கேரளத்தின் கொச்சி அல்லது கர்நாடகத்தின் பெங்களூரு அல்லது ஐதராபாத் சென்றுதான், ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையை, ஏற்படுத்தி இருக்கின்றனர். இது, தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் பயணிகளுக்குப் பெருத்த அலைச்சலையும், கூடுதல் பொருட் செலவையும் ஏற்படுத்தும். எனவே, தமிழக அரசு இந்த பிரச்னையில் தலையிட்டு, சென்னை விமான நிலையத்தையும் பட்டியலில் சேர்க்க ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories: