தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிறப்பு கண்காணிப்புக்குழு அமைப்பு

சென்னை: தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனால் சென்னையில் வசித்து வரும் லட்சக்கணக்கான பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட கடந்த 1ம் தேதி முதல் குடும்பத்துடன் செல்ல தொடங்கினர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் மக்கள் சென்றனர். ஒரே நேரத்தில் அனைவரும் சொந்த ஊர் செல்வதால் சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை குறைக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி போக்குவரத்து போலீசார் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மேலும், சென்னையில் 6 இடங்களில் தமிழக போக்குவர்தது கழகத்துடன் இணைந்து சிறப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர். குறிப்பாக செங்குன்றம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா செல்லும் பொதுமக்கள் வசதிக்காக மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல், கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் மக்களுக்கு கே.கே.நகரில் உள்ள மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஜி.எஸ்.டி சாலை வழியாக திண்டிவனம், பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் மக்கள் தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும், திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, செஞ்சி, பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், கட்டுமன்னார்கோவில் செல்லும் மக்களுக்கு ஏதுவாக தாம்பரம் ரயில் நிலையம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுதவிர வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் திருப்பதி செல்லும் மக்கள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, அரியலூர், திருண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, ராமநாதபுரம், சேலம், கோவை, பெங்களூரு செல்வதற்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த 6 சிறப்பு பேருந்து நிலையத்திற்கு செல்லும் வகையில் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்து போலீசார் அனைத்து சிக்னல்களிலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் போக்குவரத்து நெரிசலை சிசிடிவி பதிவுகள் மூலம் கண்காணிக்க சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் போக்குவரத்து போலீசார் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கண்காணித்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்து உதவி கமிஷனர்கள் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் இருந்து அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களை கண்காணித்து அந்த பகுதியில் பணியில் உள்ள போலீசார் உதவியுடன் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் போது போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் இந்த வாரம் இறுதிவரை நடைமுறையில் இருக்கும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

* ஆம்னி பஸ்களுக்கு எச்சரிக்கை

ஆம்னி பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பயணிகளை ஏற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. அனுமதி இல்லாத இடங்களில் ஆம்னி பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றினால் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: