கோவை மாவட்டத்தில் பருவமழை தீவிரம் நொய்யலில் வினாடிக்கு 1,010 கன அடி நீர் வரத்து-21 குளங்கள் நிரம்பின

கோவை : கோவை மாவட்டத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 1,010 கன அடி நீர் வரத்து உள்ளது. தவிர, உக்குளம், புதுக்குளம் உள்பட 21 குளங்கள் நிரம்பியுள்ளன.கோவை மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று வினாடிக்கு 1,010 கன அடி நீர் வரத்து இருந்தது. ஆற்றில் தண்ணீர் வரத்து உள்ளதால், குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன.

அதன்படி, சித்திரைச்சாவடி அணைக்கட்டில் இருந்து குனியமுத்தூர் வாய்க்கால், குறிச்சி வாய்க்கால், வெள்ளலூர் குளம் ஆகியவற்றிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நொய்யல் நீர் ஆதாரத்தில் உக்குளம், கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, உக்கடம் பெரிய குளம், செங்குளம், பேரூர் பெரிய குளம், குறிச்சி குளம் உள்பட மொத்தம் 24 குளங்கள் உள்ளன. இவற்றில், தற்போது உக்குளம், புதுக்குளம், நரசாம்பதி குளம், கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, உக்கடம் பெரிய குளம், குறிச்சி குளம், வெள்ளலூர் குளம் உள்பட மொத்தம் 21 குளங்களும் நிரம்பியுள்ளன.

இந்த குளங்களில் 100 சதவீதம் தண்ணீர் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பேரூர் பெரிய குளம் 95 சதவீதமும், நீலாம்பூர் குளம் 80 சதவீதமும், குனியமுத்தூர் குளம் 20 சதவீதமும் நிரம்பியுள்ளன. இந்த குளங்களுக்கு தொடர்ந்து தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. பேரூர் குளக்கரை உடையும் அபாயம் இல்லை எனவும், அங்கு 95 சதவீதம் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில், விவசாயிகள் ஒப்புதலுக்கு பின் ஷாட்டர் அடைக்கப்பட்டு தண்ணீர் ஆற்றிற்கு திறந்து விடப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

இது குறித்து பொதுப்பணித்துறையினர் கூறுகையில்,  ‘‘பேரூர் குளத்தின் மேற்கு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கரை இல்லாமல் இருந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இங்கு 1.5 மீட்டர் உயரத்தில் கரை அமைக்கும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கப்பட்டது. இப்பணிகள் முழுமையாக முடிக்கவில்லை. அதற்குள் மழை வந்து விட்டது. குளம் 95 சதவீதம் நிரம்பியுள்ளது. இதனால், விவசாயிகள் ஒப்புதல் பெற்று குளத்திற்கு செல்லும் தண்ணீர் ஆற்றிற்கு திருப்பி விடப்பட்டுள்ளது. மழைக்காலம் முடிந்தவுடன் கரை அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கும்’’ என்றனர்.  

Related Stories: