புளியந்தோப்பில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டியதில் பல கோடி ஊழல்

* 27 கோடி கூடுதலாக ஒதுக்கியது அம்பலம்

* அறப்போர் இயக்கம் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில்   864 குடியிருப்புகள், ஒவ்வொன்றும் 400 சதுர அடியில் கட்டுவதற்கு கடந்த 2017 நவம்பரில்  டெண்டர் விடப்பட்டது. இதில், பிஎஸ்டி கட்டுமான நிறுவனம் மட்டும் தகுதி  பெற்றதாக அறிவிக்கப்பட்டு, ஒருவர் மட்டுமே விலை பட்டியலில் பங்கெடுக்கும்  சிங்கிள் பிட் டெண்டராக இதை குடிசை மாற்று வாரியம் வழங்கிது.  இது, டெண்டர் சட்டத்துக்கு எதிரானது. மேலும், ஒட்டுமொத்த டெண்டரும் மிக  அதிகமான விலையான 91.82 கோடிக்கு பிஎஸ்டி நிறுவனத்துக்கு  வழங்கப்பட்டுள்ளது. அதில் பிளாக் ஏ, பி, சி, டி கட்டுவதற்கு 89.92 கோடியும், மற்ற  வேலைகளான சாலை, மழைநீர் வடிகால், தண்ணீர், கழிவுநீர் குழாய்  இணைப்பு வேலைகள் செய்ய 1.88 கோடியும் வழங்கப்பட்டது. 3,45,488 சதுர அடி  கட்டுவதற்கு 89.92 கோடி என்பது சதுர அடிக்கு 2,602 ஆகும்.

ஆனால், கடந்த  2017-18ல் தனியார் உயர் ரக கட்டுமானங்கள் கூட ஒரு சதுர அடிக்கு 1,800 ஆக  தான் இருந்தது. அப்போது, பிஎஸ்டி நிறுவனத்துக்கு அதிக விலைக்கு ஒப்பந்தம் கொடுத்ததன் விளைவாக 27.72 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.குடிசை மாற்று வாரியத்தின் கட்டுமான தரத்தை ஐஐடி  நிறுவனம் ஆய்வு செய்தது. அதில் பூச்சு வேலைகள் தரத்தை விட மிக மோசமாக  உள்ளது. முக்கியமாக  மேற்கூரை, உத்திரங்கள், பரண்களின் பூச்சு வேலைகள் செய்ய  டெண்டர்படி சிமென்ட்   மணல் விகிதாச்சாரம் 1:3 விகிதத்தில் இல்லை. பிளாக் ஏ-வில் 1:13 வரையிலும்  பிளாக் பி-யில் 1:11.6 வரையிலும் பிளாக் சி-யில் 1:13.2 விகிதம் அளவு வரையிலும்  உள்ளதை மாதிரிகள் தெரிவித்துள்ளன.

சுவர் மற்றும் தூண்களில் பூச்சு  வேலைகள் செய்ய சிமென்ட் மணல் விகிதாச்சாரம் 1:5 ஆக இருக்க வேண்டும். ஆனால்,  எடுக்கப்பட்ட 89 சதவீத மாதிரிகளில் 1:5 விகிதத்தில் இல்லை. பிளாக் ஏ-வில்  1:13.4 வரையிலும்,  பிளாக் பி-யில் 1:15 வரையிலும் பிளாக் சி-யில் 1:15.6  விகிதம் அளவு வரையிலும் உள்ளதை மாதிரிகள் தெரிவித்துள்ளன.   70 சதவீதம்  மாதிரிகளில் பூச்சு வேலைகள் மிக மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். குறைந்த  தர கான்கிரீட் பயன்படுத்தப்பட்டுள்ளதையும் ஐஐடி அறிக்கையில் கூறியுள்ளது.

இதை தவிர டைல்ஸ் வேலை, அலமாரி, தீயணைப்பு பாதுகாப்பு, மின் இணைப்பு,  தண்ணீர், மழைநீர் வடிகால் போன்ற பல விஷயங்களிலும் உள்ள தர பிரச்னைகளை  அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், ஸ்டெக்சர் இல்லாத கதவு, கைப்பிடி போன்ற  மற்ற பல வேலைகளுக்கு எந்த தரத்தில் செய்யப்பட வேண்டும் என்ற குறிப்பு  டெண்டர் ஒப்பந்தத்தில் இல்லை. சந்தை மதிப்பை விட அதிக விலைக்கு டெண்டர்  வழங்கியதன் மூலம் 27.72 கோடியும், கட்டுமான தரத்தில் செய்த ஊழலால்  மேலும் பல கோடி ஊழல் நடந்துள்ளது. இவ்வளவு பெரிய ஊழலில் ஈடுபட்ட அப்போதைய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ஐஏஎஸ் அதிகாரிகள்,  உயர் மட்ட பொறியார்கள், சான்று கொடுத்த  தணிக்கை நிறுவனம், தீயணைப்பு அதிகாரிகள் என அனைவரும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: