வேலூரின் நீர் ஆதாரமாக விளங்கும் சதுப்பேரி நிரம்பி வழிந்ததால் மக்கள் மகிழ்ச்சி: தூர்வாரும் நடவடிக்கைக்கு கோரிக்கை

வேலூர்: வேலூரின் நீர் ஆதாரமாக விளங்கும் சதுப்பேரி நீரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஏரியை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டியது. வேலூர் மாவட்டத்திலும் மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகள் நிரம்பியது. வேலூர் மாநகரம் மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நிலத்தடி நீராதாரமாக சதுப்பேரி விளங்கி வருகிறது.

621 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு விரிஞ்சிபுரம் பாலாற்றில் இருந்து அப்துல்லாபுரம் வழியாக கால்வாய் மூலம் தண்ணீர் திருப்பிவிடப்பட்டது. இனால் சதுப்பேரி வேகமாக நிரம்பி நேற்று முன்தினம் இரவு கோடி போனது (நிரம்பி வழிந்தது). இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் சதுப்பேரியின் மறுபுறம் சதுப்பேரி கிராமத்திலும் ஏரியின் ஒரு பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கரையையும் விட்டு வைக்காமல் ஆக்கிரமிப்பாளர்கள் கட்டிடங்களை கட்டியுள்ளனர்.

நாலாபுறமும் சதுப்பேரி 200 ஏக்கர் பரப்பளவுக்கும் மேல் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. கழிவுநீரும் பல்வேறு வழிகளில் ஏரியில் கலக்கிறது. திறந்த வெளி கழிப்பிடமாகவும் உள்ளது. மேலும் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான சதுப்பேரி இதுவரை தூர்வாரவில்லை. இதனால் தண்ணீர் சிறிதளவில் மட்டுமே தேக்கி வைக்க முடிகிறது. மேலும் முள் செடிகளும் அதிகளவு வளர்ந்துள்ளது.

எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: