வேளச்சேரியில் மேம்பாலத்தை திறந்து வைத்து திரும்பும்போது கான்வாயை நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழிவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

சென்னை: வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் புதிய மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து திரும்பும் போது, பின்னால் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கடந்து செல்ல ஏதுவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பாதுகாப்பு வாகனங்களை நிறுத்தி வழிவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னை வேளச்சேரி விஜயநகர் சந்திப்பில் ரூ.67 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு அடுக்கு மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பின்னர் கோயம்பேடு பகுதியில் உள்ள மேம்பாலத்தை திறக்க சாலை மார்க்கமாக தனது பாதுகாப்பு வாகனங்களுடன் முதல்வர் சென்று கொண்டிருந்தார்.

வேளச்சேரி மெயின் ரோட்டில் குருநானக் கல்லூரி அருகே செல்லும் போது, பின்னால் 108 ஆம்புலன்ஸ் ஒன்று சைரன் ஒலியுடன் வேகமாக வந்தது. இதை கவனித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பாதுகாப்பு வாகனங்களை சாலையோரம் நிறுத்தி வழிவிட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி முதல்வர் பாதுகாப்பு வாகனங்கள் அனைத்தும் சாலையோரம் நிறுத்தப்பட்டு எந்த தடையுமின்றி ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல வழி ஏற்படுத்தினர். ஆம்புலன்ஸ் சென்ற பிறகு முதல்வர் தனது பாதுகாப்பு வாகனங்களுடன் கோயம்பேடு புறப்பட்டு சென்றார். இதை நேரில் பார்த்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி முதல்வருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories: