ரூ.160.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கோயம்பேடு, வேளச்சேரி புதிய மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்: போக்குவரத்து நெரிசல் குறையும்; பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: கோயம்பேடு மற்றும் வேளச்சேரியில் ரூ.160.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இதன்மூலம் அந்த பகுதியில் பெருமளவில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.108 கோடி செலவில் வேளச்சேரி விஜயநகரம் சந்திப்பில் தரமணி சாலை,  தாம்பரம் - வேளச்சேரி சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலையை இணைத்து இரண்டடுக்கு மேம்பாலங்களாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலங்கள், பெருநகர சென்னை மாநகராட்சியில் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த வேளச்சேரி விஜயநகர சந்திப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில், ரூ.67 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டாம் அடுக்கு மேம்பாலம், தரமணி இணைப்பு சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலையை இணைக்கும் மேம்பாலம் ஆகும். இதன் நீளம் 1028 மீட்டர். மேம்பாலத்தின் இருபுறமும் 7.5 மீட்டர் அகலம் கொண்ட சேவை சாலைகள் மற்றும் நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மேம்பாலத்தை நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் மேம்பாலத்தில் காரில் பயணம் செய்தார்.வேளச்சேரியில் புதிய பாலம் திறக்கப்பட்டுள்ளதால், தரமணியில் இருந்து வேளச்சேரி புறவழிச் சாலை செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் பயனடைவார்கள்.

இதனால் விஜயநகர சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் சிரமம் குறையும். மேலும், இந்த பாலத்தினால் கிண்டி, சைதாப்பேட்டை, தரமணி, வேளச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, தொழில்நுட்ப பூங்கா சாலை, சோழிங்கநல்லூர், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் மற்றும் தாம்பரம் பகுதி மக்கள் மிகுந்த பயனடைவார்கள்.  இதை தொடர்ந்து, கோயம்பேடு, ஜவஹர்லால் நேரு சாலையில் காளியம்மன் கோயில் தெரு மற்றும் சென்னை புறநகர பேருந்து நுழைவாயில் சந்திப்பில் ரூ.93 கோடியே 50 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

கோயம்பேடு மேம்பாலம் 980 மீட்டர் நீளமுள்ள  நான்குவழி சாலை மேம்பாலமாகும். இந்த மேம்பாலம் 1.20 மீட்டர் அகலத்திற்கு மைய தடுப்புடன் கூடிய இருபுறமும் 7.5 மீட்டர் அகலமுள்ள ஓடுதளம் கொண்ட சாலை மேம்பாலம். மேம்பாலத்தின் இருபுறமும் உள்ள சேவை சாலைகளின் அகலம் பாலப்பகுதியில் 12 மீட்டர் முதல் 14 மீட்டர் வரை மற்றும் அணுகு சாலை பகுதியில் 9 மீட்டர் அகலம் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. சேவை சாலையின் இருபுறமும் நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்பாலத்தினால் இரண்டு போக்குவரத்து மிகுந்த முக்கிய சந்திப்புகளான காளியம்மன் கோயில் சந்திப்பு மற்றும் சென்னை பெருநகர பேருந்து நிலைய நுழைவாயிலுக்கு எதிரில் உள்ள சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். இந்த மேம்பாலத்தினால் திருமங்கலத்தில் இருந்து வடபழனி மற்றும் வடபழனியில் இருந்து திருமங்கலம் செல்லும் வாகன ஓட்டிகளும், கோயம்பேடு, சின்மயாநகர், விருகம்பாக்கம், எம்எம்டிஏ காலனி, அரும்பாக்கம் மற்றும் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மக்களும் பயனடைவார்கள்.சென்னையின் முக்கிய பகுதியான கோயம்பேடு மற்றும் வேளச்சேரி பகுதி கடுமையான போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி.

தற்போது இங்கு மேம்பாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளதால், இந்த பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு,  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, எம்எல்ஏக்கள் பிரபாகர் ராஜா, அசன் மவுனாலா, வேளச்சேரி பகுதி செயலாளர் அரிமா சு.சேகர், கோயம்பேடு பகுதி செயலாளர் கண்ணன் மு.ராசா, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் தீரஜ் குமார்,  

நெடுஞ்சாலை துறை முதன்மை இயக்குநர் பி.ஆர்.குமார், தலைமை பொறியாளர் (நெடுஞ்சாலை) பெருநகரம் கோதண்டராமன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* தமிழகத்தின் சிறப்பை காட்டிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்

கோயம்பேட்டில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையொட்டி பாலத்தின் மேல் பகுதியின் இரண்டு பக்கமும் தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் வண்ண படங்களுடன் கூடிய புகைப்படங்கள் வைக்கப்பட்டு இருந்தது. இது அந்த வழியே வந்த பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக, அந்த புகைப்படத்தில், ராட்டையில் ஒரு பெண் நூல் நூற்பது, விவசாயிகள் வயலில் நாற்று நடும் அழகிய காட்சி, குழந்தையும் தாயும் விளையாடுவது, வள்ளுவர் புகைப்படத்துடன் கூடிய வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தேரின் அழகிய தோற்றம், விவேகானந்தர் படம் மற்றும் அவரது இல்லம், சிலை வடிவமைக்கும் காட்சி, கிராமத்து மக்களின் அன்றாட வாழ்க்கை நடைமுறை, விவசாயிகளின் சிறப்பு, உழைப்பாளர் சிலை, பரநாட்டியம் ஆடும் பெண்கள், வீணை மீட்கும் பெண், ராஜராஜசோழன் வடிவமைத்த தஞ்சாவூர் பெரிய கோயில், பொய்க்கால் குதிரை, நாட்டுப்புற கலைகள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு சிறப்புகள் நெடுஞ்சாலை துறை மூலம் படமாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது பொதுமக்களை கவர்ந்து இழுத்தது.

Related Stories: