பாதுகாப்பான தூரத்தில் வைத்து பட்டாசு வெடிக்காவிட்டால் கண்களில் பாதிப்பு: அகர்வால்ஸ் கண் மருத்துவமனை டாக்டர் ஆர்.கலாவதி தகவல்

சென்னை: பாதுகாப்பான தூரத்தில் எச்சரிக்கையுடன் பட்டாசுகளை வெடிக்காவிட்டால், அதில் உள்ள ரசாயனங்களால் கண்கள் கடுமையாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளது என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை முதுநிலை கண் மருத்துவர் டாக்டர்  ஆர்.கலாதேவி கூறினார். இதுகுறித்து மருத்துவ  சேவைகள் பிரிவின் மண்டல தலைவரும், முதுநிலை கண் மருத்துவருமான டாக்டர்  கலாதேவி கூறியதாவது: தீபாவளி திருவிழாவின்போது உயிரிழப்பு மற்றும் ஆயிரக்கணக்கானோருக்கு உடல், கண்களில் தீக்காயங்கள் மற்றும் சுவாசப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஒருவருக்கு கண்களில் காயம் ஏற்படும்போது, அவர் ஒருபோதும் கண்களை கசக்கக்கூடாது. கண்களுக்கு ஒத்தடம் போன்ற அழுத்தத்தையும் தரக்கூடாது.

மேலும், கண்களில் தண்ணீர் ஊற்றி அலசுவது இன்னும் அதிக ஆபத்தானது. அதை தவிர்க்க வேண்டும்.  தூய்மையான நீரில் கண்களை மூழ்கச் செய்வது அல்லது தொடர்ச்சியாக தண்ணீர் மூலம் கழுவுவதே சிறந்த முதலுதவியாக இருக்கும். சுயமாக கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். காயங்களுக்கு சிகிச்சை பெற கண் மருத்துவர்களிடம் உடனே சென்று சிகிச்சை பெற வேண்டும். எனவே பட்டாசுகள் மற்றும் பிற வெடிகளை கையாளும் நபர்கள், கண்களை பாதுகாக்கின்ற கண்ணாடிகளை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

குறைந்தது 3 அடி தூரத்தில் பட்டாசுகளை கொளுத்த வேண்டும், வேடிக்கை பார்க்கும் நபர்கள் யாராக இருப்பினும் குறைந்தது 5 மீட்டர்கள் இடைவெளியைப் பராமரிக்க வேண்டும். பட்டாசுகளை வெடிக்கும் போது கான்டாக்ட் லென்ஸ்களை அகற்றிவிடுவதும், வழக்கமான கண் கண்ணாடிகளைப் பயன்படுத்துவதும் நல்லது. மேலும் கண்களில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் அவசர அழைப்பான 044-4300 8800 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Related Stories: