கைலாசநாதர் கோயில் குளத்தை சீரமைக்க ரூ.2 ேகாடி திருவண்ணாமலை கிரிவலத்துக்கான அனுமதியை முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னை மாதவரத்தில் உள்ள கற்பகாம்பாள் உடனுறை கைலாசநாதர் திருக்கோயிலில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாதவரம் கைலாசநாதர் கோயில், கரிவரதராஜ பெருமாள் கோயில்களில் ஆய்வு செய்துள்ளளோம். கைலாசநாதர் கோயிலுக்கு ஏக்கர் கணக்கில் உள்ள நிலங்கள் எந்த வருமானம் இன்றி உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அதிகபட்சமாக ரூ.92 ஆயிரம் மட்டுமே வருமானம் வந்துள்ளது. எனவே, வருவாயை அதிகரித்து அதில், கோயிலுக்கான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். ரூ.2 கோடி செலவில் கைலாசநாதர் கோயில் குளம் சீரமைக்கப்படும்.

இதற்காக, குளத்தின் வரைபடத்தை பார்வையிட்டு அதில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம். மண் ஆய்வுப்பணி முடிந்து விட்டது. விரைவில் பணிகள் தொடங்க உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 25 கோயில் குளங்கள் ரூ.15 கோடி செலவில் புனரமைக்கும் பணி நடைபெற உள்ளது. கோயில்கள், நந்தவனங்கள், திருத்தேர் உள்ளிட்டவற்றை சீரமைக்க இந்த நிதி ஆண்டில் மட்டுமே ரூ.100 கோடியை முதல்வர் ஒதுக்கியுள்ளார். இந்த நிதியை முழுமையாக பயன்படுத்தி பணிகள் நடைபெறும்.

சிலை திருட்டை தடுக்க 3007 கோயில்களில் ஸ்ட்ராங் ரூம் ஏற்படுத்தி வருகிறோம். முதல்கட்டமாக புலியூரில் நாகத்தீஸ்வரர் கோயிலில் கடந்த 2 நாட்களுக்கு முன், ஸ்ட்ராங் ரூம் திறந்து வைத்தோம். ஓராண்டுக்குள் அனைத்து கோயில்களிலும் ஸ்ட்ராங் ரூம் அமைக்கப்படும்.

கொரோனா தொற்று குறித்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி கார்த்திகை தீபத்தின்போது திருவண்ணாமலையில் பக்தர்கள் அனுமதிப்பது தொடர்பாக கலந்தாலோசித்து முதலமைச்சர் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை வடகிழக்கு  மாவட்ட திமுக செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் பிரியா, உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, திமுக நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், புழல் நாராயணன், திருவொற்றியூர் பகுதி செயலாளர் தி.மு.தனியரசு, நாஞ்சில் ஞானசேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: