கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலம் நவ.1ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

சென்னை: சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கட்டப்பட்ட கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலத்தை நாளைமறுநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரூ.146 கோடி செலவில் மேடவாக்கம்- சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பில் மேம்பாலம், ரூ.108 கோடி செலவில் வேளச்சேரி விஜயநகர் மேம்பாலம், ₹93 கோடியில் கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலம் கட்ட கடந்த 2012ல் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இப்பணிளுக்கு நிதி ஒதுக்கீடு பெறுவதிலும், டெண்டர் பணிகளை முடிப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால் கடந்த 2015ல் தான் கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலம், வேளச்சேரி விஜயநகர் மேம்பாலப்பணி தொடங்கப்பட்டது. இப்பணிகளை 2018க்குள் முடிக்க வேண்டும் என்று கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த பாலத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி முடிப்பதில் சிக்கல் இருந்தது. இதனால், அதிமுக ஆட்சி முடிந்த பிறகும் பாலப்பணி முடிந்தபாடில்லை.

இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வேளச்சேரி விஜயநகர் மேம்பாலத்தின் ஒரு பகுதி, கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பால பணிகளை அக்டோபர் 31ம் தேதிக்குள்ளும், மேடவாக்கம் மேம்பாலத்தின் ஒரு பகுதி, வேளச்சேரி முதல்அடுக்கு மேம்பால பணியை டிசம்பர் 31ம் தேதிக்குள் முடிக்க அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, மேம்பாலத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் இறுதி கட்டப்பணிகள் வேகமாக நடந்து வந்நது. இந்த நிலையில், கடந்த 27ம் தேதி மேம்பாலம் திறப்பதாக இருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்களை நவம்பர் 1ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொல் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.

கோயம்பேடு 100 அடிசாலையில் தினமும் 1.5 லட்சம் வாகனங்கள் கடக்கின்றன. இந்த பாலம் அமைக்கப்பட்டதன் மூலம் 2 சிக்னல் சந்திப்புகளில் வாகனங்கள் நிற்காமல் செல்லக்கூடிய நிலை ஏற்படும். காளியம்மன் கோயில் தெரு சந்திப்பு வழியாக மார்க்கெட், ஆம்னி பஸ் நிலையம் செல்லக் கூடிய வாகனங்கள் மற்றும் கோயம்பேடு புறநகர் பஸ் நிலையத்திற்கு செல்லக் கூடிய சந்திப்புகளில் நெரிசல் இல்லாமல் செல்ல முடியும்.கிண்டி, வடபழனியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் மேம்பாலத்தின் வழியாக திருமங்கலம், செங்குன்றம் மார்க்கத்திற்கு எளிதாக செல்ல முடியும். இதேபோன்று அந்த பகுதியில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் கிண்டி மார்க்கத்திற்கு எளிதாக கடந்து செல்ல முடியும். 60 முதல் 65 சதவீதம் வாகனங்கள் நேரடியாக மேம்பாலம் வழியாக இனிவரும் காலங்களில் கடக்க முடியும்.

தீபாவளிப் பண்டிகை நெருங்குவதால் போக்குவரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. பண்டிகைக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன. பண்டிகைக்காக வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பயணிகள் நெரிசல் இல்லாமல் உரிய நேரத்தில் செல்ல வசதியாக புதிய மேம்பாலம் தற்போது திறக்கப்படுகிறது. புதிய மேம்பாலம் திறக்கப்படுவதன் மூலம் 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் முற்றிலுமாக குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: