குமரி அணைகளில் இருந்து 3500 கன அடி தண்ணீர் வெளியேற்றம்

நாகர்கோவில்: குமரியில் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளதால் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். இன்று காலை பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1 அணைகளில் இருந்து மொத்தம் 3500 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நிலவி வருகிறது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை, மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் 31ம் தேதி வரை குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்றும் வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளுக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் இன்று காலை 43.80 அடியானது. அணைக்கு வினாடிக்கு 877 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இரந்து 1635 கன அடி உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 72.27 அடியாக உயர்ந்து உள்ளது. அணைக்கு 792 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சிற்றார் 1 அணை நீர் மட்டம் 16.10 அடியாகி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1035 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அணையில் இருந்து 1066 கன அடி தண்ணீர் உபரி நீராக திறந்து விடப்பட்டுள்ளது. சிற்றார் 2 அணை நீர் மட்டம் 16.20 அடியாக உள்ளது. பொய்கை 39 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை 45.28 அடியாகவும் உள்ளன. முக்கடல் அணை நீர் மட்டம் 25 அடியாக உள்ளது. அணைகளில் இருந்து மொத்தம் 3,501 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் கரையோர பகுதி மக்கள் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் மழை நீடிக்கும் என்பதால் பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை அளவு

மாவட்டத்தில் பெய்துள்ள மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு: பூதப்பாண்டி 15.2, சிற்றார் 1, 12.6, களியல் 26.4, கன்னிமார் 13.4, கொட்டாரம் 8.2, குழித்துறை 15.3, மயிலாடி 14.2, நாகர்கோவில் 28.2, பேச்சிப்பாறை 16, பெருஞ்சாணி 25, புத்தன் அணை 22.6, சிற்றார் 2- 19, சுருளோடு 27.6, தக்கலை 60, குளச்சல் 22.6, இரணியல் 38, பாலமோர் 29.4, மாம்பழத்துறையாறு 40, ஆரல்வாய்மொழி 4, கோழிப்போர்விளை 38, அடையாமடை 71, குருந்தன்கோடு 52, முள்ளங்கினாவிளை 17.2, ஆணைக்கிடங்கு 54.2, முக்கடல் 15.2.

Related Stories: