வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்ட பணிகள்-பெரம்பலூர் கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர் : பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, எசனை கீழக்கரை கிராமத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின்கீழ் செம்மை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதையும், மண் பரிசோதனை செய்து மண்வள அட்டை பரிந்துரையின் அடிப்படையில் உரமிடுதல், பசுந்தாள் பயிரினை பயிரிட்டு மடக்கி உழுதல் போன்ற பணிகளையும், இயற்கை முறையில் கடலை விவசாயம் செய்யும் முறைகளையும் வயல்வெளிகளுக்கே சென்று கலெக்டர் வெங்கட பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது முழு மானியத்தில் விவசாயிகளுக்கு தார்பாய் மற்றும் திரவ உயிர் உரங்களை வழங்கினார். அதனைத்தொடர்ந்து, ஆலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வேளாண்மைத்துறை சார்பில் பருத்தியில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்புத் திட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த வரப்பு பயிராக தட்டைப்பயிர், ஆமணக்கு பயிரிடப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மானிய விலையில் பூஞ்சான் நோய் தாக்காமல் இருப்பதற்காக பருத்திப் பயிருக்கு பாதுகாப்பு மருந்தை விவசாயிகளுக்கு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து ஆலம்பாடி கிராமத்தில் கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் அரசு மானியத்தில் விவசாய உற்பத்தியாளர் குழுவிற்கு வழங்கப்பட்ட சுழல் கலப்பை மற்றும் களையெடுக்கும் கருவி ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விவசாயிகளிடம் கலெக்டர் வெங்கட பிரியா கேட்டறிந்தார்.

Related Stories: