‘அண்ணாத்த’ படத்தை பேரனுடன் பார்த்த ரஜினி நெகிழ்ச்சி

சென்னை: அண்ணாத்த படத்தை பேரனுடன் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியான ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். சிறுத்தை சிவா இயக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைக்க, ரூபன் எடிட்டிங் செய்கிறார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேல.ராமமூர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர். இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி, வரும் நவம்பர் 4ம் தேதி அன்று தியேட்டர்களில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தை நேற்று முன்தினம் ரஜினிகாந்த் தனது பேரன் வேத் உடன் பார்த்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது: ‘அண்ணாத்த’ டீஸர் வெளியானதிலிருந்து எனது 3வது பேரன் வேத், படத்தை எப்போது காண்பிப்பீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருந்தான். அவனுக்கு 6 வயதாகிறது. ஒரு நாளைக்கு 15-20 முறையாவது கேட்டுவிடுவான். இன்னும் ரெடியாகவில்லை என்றால் ஏன் ரெடியாகவில்லை என்று கேட்டுக் கொண்டிருப்பான். இவனுக்காகவே நான் இயக்குநர் சிவாவிடம் சீக்கிரம் படத்தை காண்பியுங்கள், பேரன் கேட்டுக் கொண்டே இருக்கிறான் என்றேன். நீங்கள் டெல்லிக்கு போய்விட்டு வந்தவுடன் காட்டுகிறேன் என்றார். 27ம் தேதி சன் நெட்வொர்க் அலுவலகத்தில் படத்தை திரையிடுவதாக சொல்லியிருந்தார்கள்.

எனது முதல் இரண்டு பேரன்கள் யாத்ரா, லிங்கா, அவர்களது அப்பா தனுஷுடன் கொடைக்கானலில் படப்பிடிப்பில் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு படம் பார்த்தால் ரகளையாகிவிடும். ஆகையால் சொல்ல வேண்டாம் எனச் சொல்லிவிட்டேன். நான், ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மாப்பிள்ளை விசாகன், சம்பந்திகள் என அனைவரும் ‘அண்ணாத்த’ படம் பார்த்தோம். எனக்கு அருகிலேயே உட்கார்ந்து படம் பார்க்க வேண்டும் என நினைத்து, வேத் உட்கார்ந்து கொண்டான். நான் நடித்த படங்களில் அவன் திரையரங்கில் பார்க்கும் முதல் படம் இது. முழுப்படத்தையும் அவ்வளவு ரசித்து பார்த்தான்.

படம் முடிந்தவுடன் என்னை கட்டியணைத்து 3-4 நிமிஷம் விடவே இல்லை. அவனுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டால் தாத்து தாத்து என்று சொல்வான். ‘தாத்து ஐ யம் ஸோ ஹாப்பி, தேங்க் யூ’ என்று சொன்னான். எனக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது. இரவு 10 மணிக்கு மேல் திரையரங்கை விட்டு வெளியே வருகிறேன், எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால்  கலாநிதி மாறன் சார் வெளியே நிற்கிறார். என்ன சார் இந்த நேரத்தில் நீங்கள் வந்துள்ளீர்கள் என்றேன். இல்லை உங்களைப் பார்க்க வேண்டும் அல்லவா என்றார். அவ்வளவு பிஸியான மனிதர், நிற்க வேண்டிய அவசியமில்லை. எப்போதுமே மேன் மக்கள், மேன் மக்களே. இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

* டிரெய்லர் சாதனை

அண்ணாத்த டிரெய்லர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் சென்டிமென்ட், காதல், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்தும் கலந்து முழுநீள பொழுதுபோக்கு படத்துக்கான அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த டிரெய்லர், யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. டிரெய்லரை நேற்று இரவு 9.55 மணி நிலவரப்படி 69 லட்சத்து 91 ஆயிரத்து 719 பார்வை யாளர்களை கடந்து அண்ணாத்த டிரெய்லர் சாதனை படைத்துள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிதும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Stories: