நன்னிலம் அருகே சன்னாநல்லூரில் சாலை விரிவாக்கப்பணியின் போது சேதமடைந்த வழிகாட்டி போர்டு: பாதுகாப்பாக வைக்க வலியுறுத்தல்

நன்னிலம்: நன்னிலம் பேரூராட்சிக்குட்பட்ட சன்னாநல்லூரில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தார்சாலை இருபக்கத்திலும் சிமெண்ட் கலவையுடன் கூடிய கருங்கற்கள் கொட்டப்பட்டு வருகிறது.இதில் ஏற்கனவே நெடுஞ்சாலைத்துறையில் அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பலகைகள், சாலை விரிவாக்கப் பணி, செய்பவர்கள், சரியான முறையில் பணி மேற்கொள்ளாமல், வழிகாட்டி பலகைகளை, சேதப்படுத்தி, அப்புறப்படுத்தியுள்ளனர். அப்புறப்படுத்தப்பட்ட வழிகாட்டி பலகைகள், சாலையோரத்தில் கிடக்கும், அவலம் கண்டு பொதுமக்கள், வேதனையடைந்துள்ளனர். சன்னாநல்லூரில் மூன்று சாலைகள் பிரியும் இடத்தில், இரண்டுவிதமான வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டன. ஒன்று திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயிலுக்கு செல்லும் வழி என்று பெயர் குறிப்பிடப்பட்டு, அதன் தூரத்தையும் அதில் குறிக்கப்பட்டிருந்தது.

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயிலுக்கு பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் வைக்கப்பட்ட பெயர் பலகை, அதே துறையின் கீழ், நடைபெறக்கூடிய விரிவாக்கப் பணியில், சேதமடைந்து, சாலையோரத்தில், வீசப்பட்டு இருப்பது, வருத்தம் அளிக்க கூடிய செயலாகும். பணி மேற்கொள்பவர்களின் மெத்தனம் மற்றும் அலட்சிய போக்கை காட்டுவதாக உள்ளது. இனிவரும் நாட்களிலாவது, பணி மேற்கொள்ளும் பொழுது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகளை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: