நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை நவம்பர் 1-ம் தேதி வெளியிட மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்களை தாயார் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை நவம்பர் 1-ம்  தேதி வெளியிட மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 26-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க நீதிமன்றம் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தது. தமிழகம் முழுவதும் ஊரக ஊராட்சி தேர்தல் நடந்து முடிந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட தேர்தல் என்பது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலாக வரும் டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அனைத்து மாவட்ட நிர்வாகங்களுடன் தேர்தல் முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆய்வு கூட்டங்களை மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தற்போது அனைத்து மாவட்ட நிர்வாகங்களை நேரடியாக ஆய்வு செய்வதற்காக மாநில தேர்தல் ஆணையர் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று திருச்சி மண்டலதிற்க்குட்பட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெறும் சூழலில் நவம்பர் 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டுமென்று அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மாவட்ட நிர்வாகங்களுடனான ஆய்வு கூட்டத்தில் இது தொடர்பான அறிவுறுத்தலையும், ஆலோசனையும் மாநில தேர்தல் ஆணையர் தொடர்ந்து வழங்கி வருகிறார். புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வார்டு மறுவரையறை பணிகளின் தற்போதைய நிலை குறித்த ஆய்வையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

மேலும் தேர்தலுக்கு தேவையான வாக்குச்சாவடிகளை தயார்படுத்துதல் மற்றும் வாக்கு பதிவு எந்திரங்களை முதல்நிலை சோதனை செய்தல் போன்ற பணிகளை விரைவில் முடிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின் இதர பணிகளை தீவிரமாக முன்னெடுக்க வேண்டுமென்று தொடர்ந்து அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் தலைமை தேர்தல் ஆணையத்தால் சட்ட மன்ற தேர்தலையொட்டி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை அடிப்படையாக கொண்டு வரைவு வாக்காளர் பட்டியலை தயார் செய்ய வேண்டுமெனவும் தேர்தலுக்கு முன்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர் தங்களின் பெயரை சேர்த்துக்கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதையொட்டி வரும் நவம்பர் 1-ம் தேதி தங்களின் மாவட்டத்திற்குட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டுமென்றும் மற்றும் தேர்தல் நடத்தும் பணிகளில் முழுமையாக ஈடுபட வேண்டுமெனவும் மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.                                                         

Related Stories: