ரூ.200 கோடி நிதியில் இல்லம் தேடி கல்வி திட்டம்: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: ‘இல்லம் தேடி கல்வி’- திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், மரக்காணத்தில்  இன்று தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் கீழ் மாலை நேரத்தில்  பாடம் நடத்த 60 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. கொரோனா தொற்றின் காரணமாக 1 முதல் 8ம்  வகுப்பு மாணவர்களுக்கான கற்றல் பணிகள் நேரடியாக நடக்காமல் இருந்தது. அதனால், மாணவர்களின் கற்றலில் குறைபாடு  இருப்பது கண்டறியப்பட்டது.

அந்த குறைபாட்டை போக்க நடப்பு கல்வி ஆண்டின் பட்ஜெட்டில்ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியின் கீழ் தற்போது ‘‘ இல்லம் தேடி கல்வி திட்டம்’’ செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பள்ளி முடிந்த பிறகு மாலையில் 1 மணி நேரம் தொடக்க நடுநிலைப் பள்ளி குழந்தைகளுக்கு கற்றல் அனுபவத்தை உண்டாக்கும் பணி நடக்கும். இந்த பணியில் ஈடுபட தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 70 ஆயிரம் தன்னார்வலர்கள் தேவைப்படுவார்கள். இந்த திட்டம் முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் மட்டும் 6 மாதத்துக்கு செயல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து, கடந்த 18ம் தேதி இதற்கான இணைய தளம் மற்றும் பயிற்சி பணிமனையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மரக்காணத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்தது. அதில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தின் மாநில திட்ட இயக்குநர் சுதன் ஆகியோர் பங்கேற்று பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடினர். அப்போது மாநில திட்ட இயக்குநர்  சுதன் கூறியதாவது:  இல்லம் தோறும் கல்வி திட்டம் பெற்றோரின் ஒப்புதல் பெற்ற பிறகு தான் செயல்படுத்த முடியும். எனவே பெற்றோருக்கு இதுகுறித்து விழிப்புணர்வு  ஏற்படுத்தப்படும். இந்த திட்டம் 92 ஆயிரம் கிராமங்களில் வசிக்கும் 34 லட்சம் மாணவ, மாணவியருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Related Stories:

More
>