தஞ்சை மாநகராட்சியில் பாதாள சாக்கடை புதிய நவீன தொழில் நுட்பத்துடன் மேம்படுத்தப்படும்-அமைச்சர் மெய்யநாதன் தகவல்

தஞ்சை : தஞ்சை மாநகராட்சியில் பாதாள சாக்கடை புதிய நவீன தொழில் நுட்பத்துடன் மேம்படுத்தப்படும் என அமைசர் மெய்யநாதன் கூறினார்.தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 2000-ம் ஆண்டு ரூ.70 கோடி செலவில் பாதாள சாக்கடை தஞ்சை நகரில் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இத்திட்டம் முடிவடைந்து கடந்த 2014ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தஞ்சை நகராட்சியிடம் ஒப்படைத்தது. அதன் பிறகு பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து சாலைகளில் கழிவுநீர் ஓடத்தொடங்கியது. அதனால் இந்த பணிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து நேற்று தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு எண் 30 பழைய மாரியம்மன் கோயில் சாலையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அமைச்சர் மெய்யநாதன் கூறும்போது, தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் பழமையானது. அதை எதிர்கால தேவைக்கு ஏற்ப புதிய நவீன தொழில் நுட்பத்துடன் மேம்படுத்துவது குறித்தும் புறநகர் பகுதிகளை இணைத்து பாதாள சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்துவது சம்பந்தமாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தஞ்சை மாநகராட்சியில் கழிவுநீர் வாய்க்கால், பாதாள சாக்கடை திட்டம் நவீன முறையில் செயல்படுத்தப்படும். எதிர்காலத்தில் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய டெக்னாலஜி முறை பயன்படுத்தப்படும். ஆங்காங்கே தேங்கி கிடக்கும் சாக்கடை நீர் ஒட்டுமொத்தமாக இந்த பகுதிக்கு கொண்டு வரப்படும். சாக்கடை நீர் ஆறுகளிலோ, நீர்நிலைகளிலோ கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சையில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தை பார்வையிட்டேன். அங்கு தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்த தேவையான மேம்பாட்டு பணிகள் நிறைவேற்றப்படவுள்ளது. விளையாட்டு மைதானத்தில் சின்தட்டிக் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அங்கு நடைப்பயிற்சி மேற்கொள்வோர் வசதிக்காக நடை பாதை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில் அரசு கொறடா கோவி செழியன், எம்எல்ஏக்கள் துரைசந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணை தலைவர் கல்யாணசுந்தரம் மாநகராட்சி ஆணையாளர் சரவணகுமார், கூடுதல் கலெக்டர்கள் சுக புத்திரா, காந்த், மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் மற்றும் பலர் உடன் இருந்தனர். முன்னதாக நீர் முதலீடு நிறுவனத்தின் திட்டக்குழு மேலாண்மை தலைவர் எழிலன் பாதாள சாக்கடை பணிகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகள் குறித்து அமைச்சர்களிடம் வரைபடத்துடன் விளக்கிக் கூறினார்.

பள்ளி வகுப்பறை திறப்பு

கும்பகோணம் தெற்கு ஒன்றியம் திப்பிராஜபுரம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ரூ.68 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கொண்ட முதல் தளத்துடன் கூடிய பள்ளி கட்டிடத்தையும், ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலக கட்டிடத்தையும், கும்பகோணம் தெற்கு ஒன்றியம் கொற்கை ஊராட்சியில் கும்பகோணத்திலிருந்து பாபநாசம் வரையிலான புதிய வழித்தட பேருந்தையும் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மேலும், ஆரியப்படை வீடு ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூல் நிலையம், ரூ. 49 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம் கட்டிடம், பாபநாசம் தாலுகா மெலட்டூரில் புதிய பொது நூலகக் கட்டிடம், மற்றும் ஆடுதுறை பேரூராட்சியில் நெல் தரிசில் கோடை பயிர்கள் சாகுபடி விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆகியவற்றை திறந்து வைத்தனர்.

Related Stories: