திரைத்துறை சாதனைகளை பாராட்டி ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது: துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வழங்கினார்; தனுஷ், கங்கனா, விஜய் சேதுபதி, இமானுக்கு தேசிய விருது

புதுடெல்லி: திரையுலக சாதனைகளை பாராட்டி, நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நேற்று வழங்கினார். தேசிய திரைப்பட விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த, 2019ம் ஆண்டுக்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில், மொத்தம் 7 விருதுகளை தமிழ் திரையுலகம் வென்றுள்ளது. இதற்கான விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நேற்று பகல் 11 மணிக்கு நடைபெற்றது. சிறந்த தமிழ் படமாக வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த நடிகருக்கான விருது அசுரன் படத்தில் நடித்த தனுஷ், சிறந்த துணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த விஜய் சேதுபதி, சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது விஸ்வாசம் படத்துக்காக டி.இமான், சிறப்பு திரைப்படத்துக்கான விருது பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7, சிறந்த ஒலிக்கலவைக்கான விருது ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்காக ரசூல் பூக்குட்டி, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது கருப்புதுரை படத்தில் நடித்த நாகவிஷாலுக்கு வழங்கப்பட்டது. இதே விழாவில், திரையுலகில் பல்வேறு சாதனைகள் படைத்த நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதை, துணை ஜனாதிபதி வெங்கய்யாநாயுடு வழங்கினார். மற்றும் பல்வேறு மொழிகளில் தேர்வு செய்யப்பட்ட நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர், இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டனர்.

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பிறகு ரஜினிகாந்த் பேசியதாவது: கவுரவமிக்க இந்த விருதை பெறுவதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. இந்த தாதா சாகேப் பால்கே விருதை எனக்குக் கொடுத்து கவுரவித்திருக்கும் மத்திய அரசுக்கு நன்றி. இந்த விருதை எனது வழிகாட்டி, எனது குரு கே. பாலசந்தருக்கு அர்ப்பணிக்கிறேன். அதிக நன்றியுணர்வுடன் அவரை இந்த தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன். எனது சகோதரர் சத்யநாராயண கெய்க்வாட், என்னை ஒரு தந்தை போல வளர்த்தவர். நல்ல பண்புகளையும், ஆன்மிகத்தையும் எனக்கு போதித்தவர். கர்நாடகாவில் என்னுடன் பணியாற்றிய, என் நண்பர் ராஜ் பகதூரை மறக்க முடியாது.

நான் பஸ் கண்டக்டராக இருந்தபோது டிரைவராக இருந்த ராஜ்பகதூர் தான், என்னுள் இருக்கும் நடிப்புத் திறனை அடையாளம் கண்டு கொண்டார். திரைத்துறையில் நான் சேர ஊக்கம் கொடுத்தார். எனது  படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள், இயக்கிய இயக்குநர்களை, அதில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களை, சக நடிகர்களை, விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள், என் அத்தனை ரசிகர்களையும் நினைவு கூர்கிறேன். தமிழ் மக்கள் இல்லை என்றால், நான் இங்கு இல்லை. என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு நன்றி. ஜெய்ஹிந்த். இவ்வாறு ரஜினி பேசினார்.

விருது பெற்றவர்கள் விவரம்: சிறந்த தமிழ் படம் - அசுரன். சிறந்த நடிகர் - தனுஷ் (அசுரன்). சிறந்த நடிகர் - மனோஜ் பாஜ்பாய் (போன்ஸ்லே, இந்தி). சிறந்த நடிகை - கங்கனா ரனாவத் (பங்கா, மணிகர்னிகா). சிறந்த இயக்குனர் - சஞ்சய் பூரண் சிங் சவுகான் (பாத்தர் ஹூரைன் - இந்தி). சிறந்த படம் - மரைக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் (மலையாளம்). சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் - விக்ரம் மோர்(கன்னடம்). சிறந்த நடன அமைப்பாளர் - ராஜு சுந்தரம் (மகாராசி, தெலுங்கு). சிறந்த இசையமைப்பாளர் - டி.இமான் (விஸ்வாசம்). சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி (சூப்பர் டீலக்ஸ்). சிறந்த துணை நடிகை - பல்லவி ஜோசி (தி தாஸ்கென்ட் பைல்ஸ், இந்தி). சிறந்த குழந்தை நட்சத்திரம் - நாகா விஷால் (கே.டி. எனும் கருப்புதுரை). சிறந்த வசனகர்த்தா - விவேக் ரஞ்சன் அக்னிகோத்ரி. சிறந்த ஒளிப்பதிவு - கிரிஷ் கங்காதரன் (ஜல்லிக்கட்டு, மலையாளம்). சிறந்த ஒலிக்கலவை - ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு). சிறந்த அறிமுக இயக்குனர் - மதுக்குட்டி சேவியர் (ஹெலன், மலையாளம்). சிறந்த குழந்தைகள் படம் - கஸ்தூரி (இந்தி). சிறந்த படத்தொகுப்பு - நவீன் நூலி(ஜெர்சி, தெலுங்கு). சிறந்த பாடகர் - பி.பராக்(கேசரி, இந்தி). சிறந்த பாடகி - சவானி ரவீந்திரா (பார்டோ, மராத்தி). சிறப்பு பிரிவு, ஜூரி விருது - ஒத்த செருப்பு (தமிழ்).

    

* எல்லா மொழிகளும் தேசிய மொழிதான்: துணை ஜனாதிபதி பேச்சு

விழாவில் விருதுகள் வழங்கி, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு பேசியதாவது: இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள்தான். தாய்மொழியை உன்னதமாக கருத வேண்டும். அனைத்து மொழிகளுக்கும் கண்டிப்பாக நாம் மரியாதை தர வேண்டும். இதைத்தான் நான் நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ரஜினிகாந்த், இந்த மகத்தான தேசத்தின் மகத்தான மகன். பைரவி, சிவாஜி உள்பட பல படங்களில் அவரது சிறப்பான நடிப்பை பார்த்துள்ளோம். ஒப்பீடில்லாத  சிறந்த நடிப்பால் நம்மையெல்லாம் கவர்ந்தவர் ரஜினிகாந்த். திரையுலகிற்கு புதிய வழியை காட்டியவர்.

நடிப்பின்போது நடிகருக்கான பாவனைகளுக்கும் மாஸ் அப்பீலுக்கும் இடையே எப்படி ஒரு கலைஞன் தன்னை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியவர். முன்பெல்லாம் ஒரு படம் வெளிவந்தால் ஒன்றரை வருடமாவது தியேட்டர்களில் ஓடும். ஆனால் இப்போது ஒரே நாளில் படத்தை எடுத்துவிடுகிறார்கள். திரைப்படத்தை தயாரிக்கும்போது, அதில் வன்முறை ஆபாசம் இல்லாததாக பார்த்துக் கொள்ள வேண்டும். பல கலாச்சாரங்களை சார்ந்தது நம் நாடு. அதனால் உருவாக்கப்படும் படங்கள் அது சார்ந்ததாக இருக்க வேண்டும். நல்ல கதையம்சத்துடன் நல்ல கருத்துகளை சொல்லும் படங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு வெங்கய்யா நாயுடு பேசினார்.

* ரஜினிக்கு கவர்னர், முதல்வர் வாழ்த்து

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக கவர்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெறும் அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள். திரைவானின் சூரியன் ரஜினி, தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும். வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கை: தாதா சாகேப் பால்கே விருது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்காக இந்திய மக்களின் சார்பாகவும், என் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாள், திரைப்படங்களை விரும்பும் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கக்கூடியதொரு பொன்னாளாகும். இந்திய திரை உலகிற்கான தங்களின் வியத்தகு பங்களிப்புடன் பொது வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்விலும் தங்களின் தலைசிறந்த பண்பினால் நம் நாட்டு இளைஞர்களை கவர்ந்திழுத்த பண்பாளர் நீங்கள். நீங்கள் நல்ல உடல் நலத்தோடு ஆண்டுகள் பல நீடுழி வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதேபோல் தேசிய விருது பெற்ற தனுஷ், விஜய்சேதுபதி, பார்த்திபன், தாணு, இமான், ரசூல் பூக்குட்டி, நாகா விஷால் ஆகியோருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: