சமூக நலன், மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ரூ.11.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.10.2021) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் 11 கோடியே 36 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 ஒருங்கிணைந்த சேவை மையங்கள், தஞ்சாவூரில் ஒரு அரசு பணிபுரியும் மகளிர் விடுதி, தஞ்சாவூர் அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் பல்நோக்கு கூடம், சென்னை அரசினர் கூர்நோக்கு இல்லம், சமூகப்பாதுகாப்பு துறை இயக்குநரக அலுவலகம் மற்றும் இராயபுரம், அரசினர் குழந்தைகள் இல்ல வரவேற்பு பிரிவு ஆகியவற்றிற்கான கூடுதல் கட்டடங்கள் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

ஒன்றிய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும், நிராதரவாக கைவிடப்படும் பெண்கள், குழந்தை திருமணங்கள் மற்றும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு தற்காலிக தங்கும் வசதி, மருத்துவ உதவி, சட்ட உதவி, உளவியல் ஆலோசனை மற்றும் ஆற்றுப்படுத்துதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த சேவைகளை ஓரிடத்தில் வழங்கும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைவாயிலாக ஒருங்கிணைந்த சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மாவட்டத்திற்கு ஒன்று வீதம், அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இம்மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படும் போது முதல் உதவியாக மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்பதால் இம்மையங்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அனுமதியுடன், அரசு மருத்துவமனை / மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகங்களில் கட்டப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், கிருஷ்ணகிரி  -அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், நாகப்பட்டிணம்-அரசு தலைமை மருத்துவமனை வளாகம், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் தலா

48 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நீலகிரி மாவட்டம், உதக மண்டலம் - அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் 86 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், என மொத்தம் 2 கோடியே 78 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள  5  ஒருங்கிணைந்த சேவை மையங்கள்;    

உழைக்கும் பெண்கள் பணி நிமித்தம் நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வருவதால், அப்பெண்களின் நலனை பாதுகாத்திடும் வகையிலும், பணிபுரியும் பெண்களின் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டும், மாநிலம் முழுவதும் பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக் கோட்டையில் 1 கோடியே 46 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அரசு பணிபுரியும் மகளிர் விடுதி;

சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநரக சார்பில் சென்னை, கெல்லீஸில் இயங்கி வரும் அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கு இரண்டாம் கட்டமாக 17,567 சதுர அடி பரப்பளவில் 4 கோடியே 53 இலட்சம் ரூபாய் செலவில், சிறார்களை பாதுகாப்புடன் பராமரித்து அவர்களின் மறுவாழ்விற்குரிய பயிற்சிகள் வழங்கிட தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடம்;

சென்னை, கெல்லீஸில் இயங்கி வரும் சமூகப் பாதுகாப்புத் துறை இயக்குநரக அலுவலகத்திற்கு கூடுதல் இட வசதி ஏற்படுத்தும் பொருட்டு 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டாம் தளம்;

இராயபுரம், அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் ஏற்கனவே உள்ள வரவேற்பு பிரிவுக் கட்டடத்தில் 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவ சிகிச்சை அறை, ஆற்றுப்படுத்துதல் அறை, பொழுதுபோக்கு அறை, அலுவலக அறை, துயிற்கூடம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் கொண்ட முதல் தளம்;

தஞ்சாவூரில் இயங்கி வரும் அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில்48 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்குக் கூடம்;என மொத்தம் 11 கோடியே 36 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கான கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள்.

Related Stories: