கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு செங்கம் செய்யாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: சிறுபாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

செங்கம்: கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு செங்கம் செய்யாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிறுபாலம் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஜவ்வாதுமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பெய்து வந்த கனமழையால் ஓடைகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக செய்யாற்றில் தண்ணீர் செல்கிறது. மேலும், அங்குள்ள குப்பநத்தம் அணை நிரம்பி வரும் நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதில் இருந்து வெளியேறும் தண்ணீரும் செய்யாற்றில் செல்கிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஜவ்வாதுமலையில் பெய்த கனமழையால் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இருபுறமும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் நேற்று அதிகாலை முதல் செங்கம் நகரில் இருந்து தளவாய் நாயக்கன்பேட்டைக்கு செல்லும் சிறுபாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்பு அமைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், செங்கம் நகரில் ஆற்றில் வெள்ளம் ஓடுவதை பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக வந்து வேடிக்கை பார்ப்பதுடன், செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குப்பநத்தம் அணை கட்டுவதற்கு முன்பு, இதுபோல் காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதன் பிறகு தற்போது செங்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தொடர் மழை காரணமாக செங்கம் நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>