கொரோனா பாதிப்பிற்கு பிறகு இந்தியாவில் மனிதர்களில் சராசரி ஆயுள் காலம் 2 ஆண்டுகள் குறைவு: ஆய்வில் தகவல்..!

கொரோனா பாதிப்பிற்கு பிறகு இந்தியாவில் மனிதர்களில் சராசரி ஆயுள் காலம் 2 ஆண்டுகள் குறைந்திருப்பதாக ஆய்வு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா வைரஸ் உருமாற்றமடைந்து பல அலைகளாக தாக்க தொடங்கியுள்ளது. இதனால், உலக நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன.

தற்போதை நிலையில் தடுப்பூசியால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருவதால், தடுப்பூசி போடும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. டெல்டா வகை கொரோனா பரவலால் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. இதனால் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள், முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்தியாவில் கடந்த ஜனவரி முதல் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பிற்கு பிறகு இந்தியாவில் மனிதர்களில் சராசரி ஆயுள் காலம் 2 ஆண்டுகள் குறைந்திருப்பதாக ஆய்வு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மும்பையை சேர்ந்த மக்கள் தொகை ஆய்வுக்கான சர்வதேச மையம் என்ற அமைப்பு இந்த தகவலை தெரிவித்துள்ளது. 2019-ம் ஆண்டு ஆண்களின் சராசரி வயது 69.5ஆகவும், பெண்களின் சராசரி வயது 72-ஆகவும் இருந்ததாக அம்மய்யத்தின் பேராசிரியர் சூரியகாந்தி யாதவ் தெரிவித்துள்ளார்.

2020-ம் ஆண்டு இது ஆண்டுகளுக்கு 67.5ஆகவும், பெண்களுக்கு 69-8ஆகவும் குறைந்து விட்டதாக அவர் கூறியுள்ளார். எனினும் கொரோனா சூழல் முழுமையும் கட்டுக்குள் வரும் பட்சத்தில் சராசரி ஆயுள் காலம் மீண்டும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: