ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பயனடையும் 9,860 அர்ச்சகர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு: அறநிலையத்துறை அறிவிப்பு

சென்னை: ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பயனடையும் 9,860 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் பூசாரிகளின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில்  தங்கள் பெயர் விடுபட்டு இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி வாயிலாக தெரிவிக்க வேண்டும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 34,111 கோயில்களில் ஆண்டுக்கு 10 ஆயிரத்துக்கும் குறைவாக தான் வருவாய் வருகிறது. இதனால் பெரும்பாலான கோயில்களில் பூஜை நடத்த முடியாத நிலை இருந்தது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஒவ்வொரு கோயிலுக்கும் ரூ.1 லட்சம் முதலீட்டு தொகை அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு கால பூஜை திட்டம் மாநிலம் முழுவதும் 12,959 கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அந்த நிதியும் போதுமானதாக இல்லை என்ற நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் ரூ.2 லட்சமாக முதலீட்டு தொகையை அதிகரித்து அறிவித்தது. இந்த நிதியை கொண்டு கோயில்களில் ஒரு கால பூஜை திட்டம் தங்கு தடையின்றி தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படுவதில்லை. அவர்கள் தட்டுக்காசை மட்டுமே நம்பியிருக்கும் நிலை இருந்தது. இதனால், அவர்கள் தங்களது குடும்பத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்கம் சார்பில் அர்ச்சகர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கடிதம் அளித்தனர். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஒரு கால பூஜை திட்டம் செயல்படுத்தப்படும் 12,959 கோயில்களில் மாத ஊக்கத்தொகை 1000 வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.இந்த அறிவிப்பை உடனே நடைமுறைக்கு கொண்டு வரும் வகையில் தமிழகத்தில் உள்ள ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பணிபுரியும் 12,959 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 11ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் அடையாளமாக 250 பேருக்கு மாத ஊக்கத்தொகை வழங்கினார். இந்நிலையில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பயனடையும் 9860 பேரின் பட்டியல் அறநிலையத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கடந்த மாதம் 4ம் தேதி சட்டப்பேரவையில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக ரூபாய் 1,000 வழங்கப்படும் என்று கடந்த மாதம் 4ம் தேதி நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.இத்திட்டத்தை கடந்த மாதம் 11ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டு, இத்திட்டத்தின் கீழ் பயனடையும் 9860 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் பெயர் பட்டியல் இத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இப்பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறவில்லை என கருதும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் இத்துறை தலைமை அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசியான 044-28339999 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, மொபைல் எண் மற்றும் தாங்கள் பணிபுரியும் கோயில் பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கலாம். விவரங்கள் சரிபார்க்கப்பட்டு விடுப்பட்ட பெயர்கள் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறவில்லை என கருதும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் இத்துறை தலைமை அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசியான 044-28339999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Related Stories: