சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை உடனடியாக வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ஒன்றிய அமைச்சரிடம் வழங்கினார் டி.ஆர்.பாலு

புதுடெல்லி: தமிழகத்தில், குறிப்பாக டெல்டா மாவட்ட கிராமங்களில் நடவு மற்றும் நேரடி விதைப்புக்கு அடியுரமாக டிஏபி, உரம் தேவைப்படுகிறது. தற்போது இந்த உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. டிஏபி உரத்துக்கான மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கான கூடுதல் மானியத் தொகையை ஒன்றிய அரசு ஏற்காததால், உர நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியைக் குறைத்துள்ளன. இறக்குமதியும் குறைக்கப்பட்டுள்ளதால் உரத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இது தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் இதே நிலை நீடித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தை பொருத்தவரை, தர வேண்டிய நிலுவை உரத்தை ஒன்றிய அரசு தராமல் கால தாமதம் செய்து வருகின்றது. இந்த நிலையில் நிலுவை உரத்தை வழங்க வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தை ஒன்றிய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியாவை நேரில் சந்தித்து தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு வழங்கினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் சம்பா சாகுபடி என்பது முகவும் முக்கியமான ஒன்றாகும். இது விரைவில் தொடங்க உள்ளது. அதனால் அதற்கு தேவையான டிஏபி மற்றும் உரத்தை உடனடியாக வழங்க வேண்டும் என ஒன்றிய அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒன்றிய அரசு தரப்பில் நிலுவையில் இருக்கும் 1.59 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உட்பட உரங்களை வழங்க வேண்டும். இதைத்தவிர கூடுதலாக 25ஆயிரம் மெட்ரிக் டன் டிஏபியும், 10 ஆயிரம் மெட்ரிக் டன் எம்ஓபி உரங்களையும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்த ஒன்றிய அமைச்சர் இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். ஓரிரு நாளில் தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களை ஒன்றிய அரசு அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

Related Stories:

More
>