மலையோர பகுதிகளில் மழை குறைவு எதிரொலி: குமரி அணைகளில் உபரிநீர் திறந்துவிடுவது நிறுத்தம்.!

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் மழை குறைந்ததால்  பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து குறைந்தது. அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. அணைகள் உச்சநீர்மட்ட அளவை எட்டியதால் பொது மக்களுக்கு அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு, அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. கன மழை மற்றும் அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், செந்தில்பாலாஜி, மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளருமான என்.சுரேஷ்ராஜன், கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலாசாமி, கலெக்டர் அரவிந்த் மற்றும் உயரதிகாரிகள் மாவட்டத்தில் தங்கி இருந்து எடுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். போர்க்கால அடிப்படையில்  சேதமான 15க்கும் மேற்பட்ட மின் மாற்றிகள் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு, இரவு பகலாக பொருத்தி மின் இணைப்புகளும் முழுமையாக வழங்கப்பட்டது. மேலும் மழை குறைந்து, அணைகளுக்கு நீர் வரத்து குறைந்ததால் அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது.

மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி 48 அடி உச்சநீர்மட்டம் கொண்ட  பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 43.16 அடியாக இருந்தது. அணைக்கு 1043 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 77 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.43 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1075 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது பெருஞ்சாணி அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. சிற்றார்-1ல் 16.14 அடியும், சிற்றார்-2ல் 16.24 அடியும் நீர்மட்டம் உள்ளது. பொய்கையில் 35.70 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 36.58 அடியும், முக்கடல் அணையில் 25 அடியும் தண்ணீர் உள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ெகாட்டாரத்தில் 41.2, ஆரல்வாய்மொழி பகுதியில் 32 மி. மீ, நிலப்பாறை பகுதியில் 24 மி. மீ. மழை பதிவாகி இருந்தது.

Related Stories:

More
>