கோமாவிற்கு சென்ற சிறுவனை எக்மோ உதவியுடன் காப்பாற்றி ரேலா மருத்துவமனை சாதனை

தாம்பரம்: உடல் உறுப்பு செயலிழப்பால் அவதிப்பட்ட சிறுவனை எக்மோ உதவியுடன் காப்பாற்றி ரேலா மருத்துவமனை சாதனை செய்துள்ளது. கேரள மாநிலம், கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 2 வயது சிறுவன் அத்விக். சிறுவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்த குழந்தை நல மருத்துவர் சிறுவனுக்கு கல்லீரல் செயலிழந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்த காரணத்தால் கோமாவிற்கு சென்று மூச்சு விட முடியாமல் மோசமான சுவாசப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த சிறுவன் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சையில் சிறுவனுக்கு நுரையீரலில் தொற்று இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவனது ஆக்சிஜன் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வந்தது. இதனைத் தொடர்ந்து அவனுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. பின்னர், டாக்டர் ரவிக்குமார் மற்றும் டாக்டர் ஆறுமுகம் தலைமையிலான மருத்துவ குழு தீவிர குழந்தை சிகிச்சை நிபுணர் குழுவுடன் இணைந்து உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இல்லாமல் குழந்தையின் உயிரைக் காப்பாற்றி உள்ளனர். சிறுவன் அத்விக்கிற்கு வைரஸ் தொற்று காரணமாக மூளையில் பாதிப்பும், கல்லீரல் செயலிழந்து இருந்ததும் மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது.  

சிறுவனுக்கு மிக அதிக ஐ.என்.ஆர் இருந்தபோதிலும் அவனது உணர்ச்சி மிகவும் குறைவாக இருந்தது. சிறுவனுக்கு பல்வேறு உறுப்புகள் செயலிழந்து இருப்பதை கண்ட ரேலா மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் அவனுக்கு ஆக்சிஜன் அளவு மோசமடைந்து வருவதால் வென்டிலேட்டர் உதவியுடன் ஆக்சிஜன் அளிக்க முடிவு செய்தனர். இந்த சிகிச்சையின் மூலம் கல்லீரல் செயல்பாடு மற்றும் மூளை செயல்பாட்டில் சற்று முன்னேற்றம் காணப்பட்டாலும், அவனது நுரையீரல் படிப்படியாக மோசமடைந்தது. அவனுக்கு இறுதியாக எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறுவன் உயிரை காப்பாற்றி ரேலா மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

Related Stories: