கிராமங்களிலும் பிபிஓ சென்டர் நடத்தும் அளவுக்கு இணையதள வசதி பாரத்நெட் இரண்டாம் கட்ட திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

* விரைவில் தமிழ்நெட் திட்டம்

* அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு

சென்னை:  தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம், தமிழகத்தில் பாரத்நெட் 2ம் கட்ட திட்டம் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் சம்பந்தபட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதை தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:

 பாரத்நெட் திட்டம் என்பது தமிழகத்தில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளையும், கண்ணாடி இழை கம்பி வடம் மூலம் இணைத்து அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டமாகும். இத்திட்டத்தினை தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் என்ற சிறப்பு நோக்கு நிறுவனம் ரூ.1815.32 கோடி செலவில் செயல்படுத்தும்.

இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 1 ஜிபிபிஎஸ் அளவிலான அலைக்கற்றை அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளிலும் வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மாவட்டங்கள் வாரியாக நான்கு தொகுப்புகள் (ஏ,பி,சி,டி) என பிரிக்கப்பட்டு தொகுப்புக்கு ஒருவர் என நான்கு திட்ட ஒருங்கிணைப்பாளர்களும், தணிக்கை மற்றும் ஆய்வு செய்ய மூன்றாமவர் முகமையும் தெரிவு செய்யப்பட்டது. தற்போது சி மற்றும் டி தொகுப்புகளுக்கான திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.

தொகுப்பு சி.யின் கீழ் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் 3326 கிராம பஞ்சாயத்துகளும், தொகுப்பு டி.யின் கீழ் கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் 3103 கிராம பஞ்சாயத்துகளும் பாரத்நெட் திட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டு 1 ஜிபிபிஎஸ் அளவிலான அலைக்கற்றை சேவை வழங்கப்படும்.

 தொகுப்பு ஏ மற்றும் பி.யில் நிலுவையில் உள்ள மேல் முறையீட்டு வழக்குகள் முடிவுக்கு வந்த பின்பு தமிழகத்தில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் மூலம் அனைத்து கிராமப்புறங்களுக்கும் மலிவான மற்றும் தரமான டிஜிட்டல் சேவைகளை வழங்க முடியும். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அதிவேக இணையதள சேவையை பெற முடியும். கிராமத்தில் ஒரு பிபிஓ சென்டர் நடத்தக்கூடிய அளவுக்கு இணையதள வசதி போதுமான அளவுக்கு கிடைக்கும். இந்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியானது, முதல்வரின் கனவான கிராமப்புறங்களை உயர்த்த வேண்டும் என்ற திட்டத்துக்கு மெருகூட்டும் வகையில் அமையும். பொதுத்துறை நிறுவனமான ஐடிஐ, தனியார் நிறுவனமான எல் அண்ட் டி ஆகிய இரண்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

தொகுப்பு சி மற்றும் டி.க்கான பணி ஒப்பந்தத்தை தான் நாம் இன்று வழங்கியுள்ளோம். இதன் திட்ட மதிப்பீடு தலா ரூ.435 கோடி. கடந்த ஆட்சியில் போடப்பட்ட திட்டத்தை ஒன்றிய அரசு ரத்து செய்தது.  இந்த இரண்டு தொகுப்புகளுக்கான திட்டத்தை செயல்படுத்த தடை ஏதும் இல்லை என்பதை சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து ஒப்புதலை பெற்ற பின்பு தான் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் ஐடி நிறுவனங்களை தொடங்க தனியார் ஐடி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பெரிய ஐடி நிறுவனங்கள் அதற்கு இசைவு தெரிவித்துள்ளார்கள்.

இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களுக்கு ஐடி நிறுவனங்களை கொண்டு செல்வோம். பாரத் நெட் என்பது ஒன்றிய அரசின் திட்டம். தமிழ்நெட் என்பது நகர்ப்புற பகுதிகளுக்கும் பைபர் மூலம் இணையதள சேவை வழங்கும் திட்டம். நகர பகுதிகளையும், கிராம பஞ்சாயத்துகளையும் இணைக்கும் வகையில் இது உருவாக்கப்படும். ஒட்டுமொத்த தமிழகத்தையும் இணைக்கும் வகையில் தமிழ்நெட் திட்டம் விரைவில் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மை செயலாளர் நீரஜ் மிட்டல், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் கமல் கிஷோர், பாரத் பிராட்பேண்ட் நெட்ஒர்க் நிறுவன தலைமை பொது மேலாளர் கலைவாணி, முதன்மை பொது மேலாளர் சந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: