கடலில் மூழ்கி இறக்கும் நிகழ்வுகளை தடுக்க மெரினாவில் ‘கடற்கரை உயிர்காப்பு பிரிவு’ தொடக்கம்: சுற்றி பார்க்க வரும் மாணவர்கள் தண்ணீரில் இறங்கக்கூடாது என டிஜிபி வேண்டுகோள்

சென்னை: கடலில் மூழ்கி இறக்கும் நிகழ்வுகளை தடுக்கும் வகையில் ‘கடற்கரை உயிர்காப்பு பிரிவு’ என்ற புதிய பிரிவை டிஜிபி சைலேந்திரபாபு மெரினா கடற்கரையில் தொடங்கி வைத்தார். அப்போது, கடற்கரையை சுற்றிபார்க்க வரும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் யாரும் தண்ணீரில் இறங்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார். தமிழக காவல்துறை மானியக்கோரிக்கையின் போது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் நீரில் மூழ்கி இறக்கும் நிகழ்வுகளை தடுக்க சென்னை மாநகர காவல்துறையில் மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவு ஆரம்பிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பை தொடர்ந்து, கடந்த 13ம் தேதி டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், மெரினா கடற்கரை உயிர்காப்பு பிரிவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக கடலோர பாதுகாப்பு குழுமம் கூடுதல் இயக்குநர் சந்தீப் மிட்டல் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை பின்புறம் ‘கடற்கரை உயிர்காப்பு பிரிவு’ தொடங்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த பிரிவை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.

அப்போது சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், கடலோர பாதுகாப்பு குழும இயக்குநரும், கடற்கரை உயிர்காப்பு பிரிவின் ஒருங்கிணைப்பு அதிகாரியான சந்தீப் மிட்டல் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள கடற்கரை உயிர்காப்பு பிரிவில், ஏற்கனவே மெரினா கடற்கரையில் செயல்பட்டு வரும் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரை ஒருங்கிணைத்தும், கடலோர காவல்படை ஆய்வாளர் தலைமையில் 12 பயிற்சி பெற்ற மீனவ இளைஞர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த உயிர்காக்கும் பிரிவுக்கு என தனியாக இரண்டு 108 அவசர சிகிச்சை வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கும். இந்த பிரிவை மேலும் பலப்படுத்தும் வகையில் 50 ஆயுதப்படை காவலர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உயிர் காக்கும் நீச்சல் பயிற்சி அளித்து கூடுதலாக பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் தண்ணீரில் ஒருவர் அடித்து செல்லப்படுவது போலவும், அவர்களை உயிர்காப்பு பிரிவினர் துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்டு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து காப்பது போலவும் செயல் விளக்கத்தை செய்து காட்டினர்.

பின்னர் டிஜிபி சைலேந்திரபாபு நிருபர்களிடம் பேசியதாவது: மெரினா மற்றும் ராயபுரம் கடற்கரை பகுதிகளில் ஆண்டுக்கு 100 பேர் கடலில் குளிக்கும் போது இறந்து வருகின்றனர். இதை தடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் ‘உயிர்காப்பு பிரிவு’ தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதைதொடர்ந்து முதற்கட்டமாக சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் மற்றும் அதிகாரிகள் இந்த உயிர்காப்பு பிரிவு ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த பிரிவில் காவல் துறை, தீயணைப்புத்துறை, கடலோர காவல் படை, மாநகர போலீஸ், மீனவர்கள் என எல்லோரும் உள்ளனர். கடற்கரையில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில் அதிநவீன கேமராக்கள் அமைத்து தண்ணீரில் யாரேனும் தத்தளிக்கிறார்களா என்று கண்காணிக்கப்படும். இந்த திட்டம் முதல்வர் உத்தரவுப்படி முழு வடிவம் பெறும்.

மெரினாவுக்கு வரும் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள், நண்பர்கள், பள்ளி, கல்லூரியில் இருந்து வரக்கூடிய மாணவர்கள் தயவு செய்து தண்ணீருக்குள் போகக்கூடாது. இந்த தண்ணீர் பார்த்தால் சாதாரணமாக தெரியும், ஆனால் தண்ணீருக்குள் ஆபத்தான நீரோட்டம் இருக்கும். அது உங்களுக்கு தெரியாது. நீச்சல் தெரியும் என்று சில இளைஞர்கள் குளிக்க போகிறார்கள். ஆனால் தண்ணீர் உங்களை இழுத்து ெசன்றுவிடும். மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் தண்ணீருக்குள் போக கூடாது. காவல் துறையினர் சொல்லக்கூடியதை கேட்க வேண்டும். எனவே கடற்கரைக்கு வந்துவிட்டு மக்கள் அமைதியாக செல்ல வேண்டும் என்று காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: