இன்ஜி. துணை கலந்தாய்விற்கு 12,402 பேர் பதிவு 9,455 பேருக்கு தரவரிசை பட்டியல் வெளியீடு: தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தகவல்

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்விற்கு 12,402 பேர் விண்ணப்ப பதிவு செய்த நிலையில் அவர்களில் பதிவுக் கட்டணம் செலுத்திய 9,455 பேருக்கு இன்று காலை 10 மணிக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2021-22 பொது கலந்தாய்வின் முடிவில் 89,187 இடங்கள் நிரப்பப்பட்டன. இந்நிலையில், நிரப்பப்படாமல் உள்ள பொது, தொழிற்கல்வி மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% சிறப்பு உள் ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு, பொதுக் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாத தகுதி வாய்ந்த மாணவர்கள் மற்றும் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மானவர்கள், விண்ணப்ப கட்டணமாக ரூ.500 (எஸ்.சி, எஸ்.டி - ரூ.250) செலுத்தி  https://www.tneaonline.org  அல்லது https://www.tndte.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்விற்கு பொது, தொழிற்கல்வி மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் என மொத்தம் 12,402 பேர் விண்ணப்பப் பதிவு செய்தனர். அவர்களில் பதிவு கட்டணம் செலுத்திய 9,455 மாணவர்களுக்கு இன்று காலை 10 மணிக்கு தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் இன்று மற்றும் நாளை (22ம் தேதி)  என இரண்டு நாட்கள் மாணவர்கள் விரும்பும் பாடம், மற்றும் கல்லூரிகள் தேர்ந்தெடுக்க  கால அவகாசம் வழங்கப்படும். இதை தொடர்ந்து, வருகிற 24ம் தேதி மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கைக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Related Stories: