தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 26ம் தேதி முதல் தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தென் மேற்கு பருவமழை  26ம் தேதி விலகுவதை அடுத்து, தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வெப்ப சலனம் காரணமாக வளிமண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டு அடிக்கடி மழை பெய்து வருகிறது. அதே நேரத்தில் தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக கேரளா உள்ளிட்ட அரபிக் கடல் ஒட்டிய பகுதிகளிலும் தென் மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

தற்போது கேரளாவில் தென் மேற்கு பருவக் காற்றின் தீவிரம் அதிகரித்து அங்கு மிக கனமழை பெய்து பெரும் வெள்ளம் ஏற்பட்டு சேதமும் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்த மழை மேலும் நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், திருச்சி மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது.

பிற மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை புறநகர் பகுதியில் நேற்று மழை பெய்தது. இதையடுத்து,  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்கள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், பிற தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  நாளை பெய்யும். இதே நிலை 25ம் தேதி வரை நீடிக்கும்.

இந்நிலையில், வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் 26ம் தேதி முதல் வடகிழக்கு திசையில் இருந்து பருவக் காற்று வீசுவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவ மழை இந்திய பகுதிகளில் இருந்து விலகி 26ம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை பெய்வதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவ மழை இந்திய பகுதிகளில் இருந்து விலகி  26ம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை பெய்வதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது.

Related Stories: