வேலூர் கோட்டையை சுற்றுலா பயணிகள் இரவிலும் கண்டு ரசிக்க மின்விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடவடிக்கை .!

வேலூர்: வேலூர் கோட்டையை சுற்றுலா பயணிகள் இரவிலும் கண்டு ரசிக்கும் வகையில் மின்விளக்குகள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளதால், இங்கு பல்வேறு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வேலூரில் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் கோட்டையை அழகுபடுத்த ₹33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வேலூர் கோட்டையின் பழமை மாறாமல் அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகள் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அலங்கார விளக்குகள், கேமராக்கள் பொருத்துவது, பெயர்ப் பலகை வைப்பது, தண்ணீர் வசதி உள்பட அடிப்படை வசதிகளை மேற்கொள்வது என பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் கோட்டையில் உள்ள சாலைகள், பூங்காக்கள் மற்றும் பழமையை பிரதிபலிக்கும் வகையில் தெருவிளக்குகள் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. கோட்டைக்கு வருபவர்கள் மாலை வேளையில் வெளியே உள்ள பூங்காவில் அமர்ந்து மகிழ்கின்றனர். பூங்காவில் இருந்து பார்க்கும்போது கோட்டையின் கம்பீர தோற்றத்தை காணலாம். ஆனால் சூரியன் மறைந்த பின்னர் அதை ரசிக்க முடியாது. மின் விளக்குகள் இல்லாததால் கோட்டை முழுவதும் இருள் சூழ்ந்திருக்கும். இரவு நேரத்திலும் கோட்டையை பார்க்கும் வகையில் மின்விளக்குள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோட்டையை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நுழைவு வாயில் முதல் உள்புறம் மற்றும் வெளிபுற பகுதிகளில் பழமையை பிரதிபலிக்கும் தெரு மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பணி தொடங்கியது. ஆனால் தெருவிளக்கு கம்பம் உயரம் குறைவாக இருந்தது. மேலும் வாகனங்கள் செல்லும்போது சேதம் அடையும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து உடனடியாக அப்பணிகள் நிறுத்தப்பட்டு, உயரமான மின்கம்பங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது உயரமான கம்பம் அமைத்து மின்விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறது. கோட்டையின் எதிர்புறம் அகழியை ஒட்டியவாறு விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. கோட்டையை சுற்றி இந்த விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. இந்த விளக்குகளின் ஒளி மூலம் கோட்டையின் அழகை இரவிலும் ரசிக்கலாம். மேலும் வரலாறு தொடர்பான விவரங்கள் படகாட்சியாக ஒளிபரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

More
>