கொரோனா அச்சமின்றி படிக்கட்டிலும் பயணம் ஆபத்தை அறியாமல் பஸ் பின்னால் தொங்கியபடி செல்பி எடுக்கும் வாலிபர்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆற்காடு: கொரோனா அச்சமின்றி அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களில் தொங்கியபடி செல்பி எடுக்கும் நபர்களால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் பஸ்களில் அதிக பயணிகளை ஏற்றக்கூடாது. பயணம் செய்யும் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆற்காடு பகுதியில் செல்லும் பல பஸ்களில் இந்த உத்தரவு காற்றில் பறந்த நிலையில் உள்ளது. அரசின் உத்தரவை மீறி பஸ்களில் அதிக அளவு பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியாமல் செல்லும் அவல நிலை உள்ளது. மேலும் பஸ்களில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர் ஆகியோரும் முகக்கவசம் அணியாமல் செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று சென்னையிலிருந்து ஆற்காடு வழியாக ஆரணி நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றது. அந்த பேருந்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர். மேலும் பஸ்சின் 2 படிக்கட்டுகளிலும் அதிகளவு பயணிகள் தொங்கியபடி சென்றனர். மேலும் பஸ்சின் பின்புறம் உள்ள இரண்டு ஏணிகளிலும் வாலிபர்கள் தொங்கியபடி சென்றனர்.அதில் ஒருவர் ஏணியில் தொங்கியபடி ஆபத்தை உணராமல் செல்பி எடுத்தபடி சென்றது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. பஸ்களில் அதிக அளவு பயணிகளை ஏற்றிச்செல்லும் சம்பவத்தால் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி விபத்து ஏற்படும் முன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: