குமரியில் 3வது நாளாக போக்குவரத்து துண்டிப்பு: வெள்ளம் வடியாததால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: மழைக்கு பலி 5 ஆக உயர்வு

சென்னை: குமரி மாவட்டத்தில் மழை ஓய்ந்தும் வீடுகள், ரோடுகளில் தேங்கிய வெள்ளம் வடியவில்லை. இதனால் 3வது நாளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குமரியில் மழைக்கு 3 பேரும், ராணிப்பேட்டையில் 2 பேரும் பலியாகி உள்ளனர். குமரி மாவட்டத்தில், கடந்த 14ம் தேதி மாலை முதல் பெய்த தொடர் பேய் மழையால், முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 26 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் மூழ்கின. மழை வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்டன. பாலங்கள் உடைந்தன.  கடந்த 4 நாட்களாக தாமிரபரணி, பரளியாறு, கோதையாறு, வள்ளியாறு, பழையாற்றில் வெள்ளம் கரை புரண்டது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்தது. திருவட்டார் ஆற்றூர் கல்லுப்பாலம் இசக்கியம்மன் கோயிலுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. மாவட்டத்தில் 11 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, 500க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

 

இந்நிலையில் நேற்று மழை ஓய்ந்தது. எனினும் அணைகளுக்கு வந்த உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் வெள்ளம் இன்னும் வடியவில்லை. பல இடங்கள் நேற்றும் தண்ணீரில் மிதந்தன. இதனால் மக்கள் இயல்பு வாழ்ககை பாதித்தது. பார்த்திபபுரம் பகுதியில் சாலையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றது. வீடுகளை விட்டு மக்கள் வெளியேற முடியாததால் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பாக அழைத்து வந்தனர். மலை கிராமங்களில் சாலைகள் துண்டிப்பால் 3 வது நாளாக போக்குவரத்து முடங்கி உள்ளது. சில பகுதிகளில் நேற்று மதியத்துக்கு பின், மழை வெள்ளம் குறைந்தது. இதனால் முகாம்களில் இருந்தவர்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

வாழைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள் வயல்களில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்கிறது. இன்னும் இரு நாட்கள் கழித்தே தண்ணீர் வடியும் என விவசாயிகள் கூறினர். செங்கல் சூளைகளும் மூழ்கி கிடக்கின்றன. தண்ணீரில் மூழ்கி உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.

குளச்சல் அருகே குறும்பனையை சேர்ந்த  நிஷான் (17) என்ற பிளஸ் 2 மாணவர், தனது நண்பர்களுடன் கடியப்பட்டணம் வள்ளியாற்றில் தடுப்பணை அருகே குளித்த போது நீரில் மூழ்கி இறந்தான். குழித்துறை அருகே முழுக்கோடு குழிவிளாகம் குளத்தில் குளித்த, சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஜெபின் (17) என்ற பிளஸ் 2 மாணவனும் மூழ்கி பலியானான்.  இந்த நிலையில், திருவட்டாரை அடுத்த கொட்டூர் பகுதியை சேர்ந்த லெனின்ஹெரால்டு (25) என்ற தொழிலாளி கடந்த 16ம்தேதி மாலை பரளியாற்றில் உள்ள சப்பாத்து பகுதியில் ஆற்றில் குளித்துள்ளார். அப்போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இந்நிலையில் ேநற்று காலை அப்பகுதியில் உள்ள வாழை தோப்பில் லெனின் ஹெரால்டு பிணமாக கிடந்தது கண்டுடிபிடிக்கப்பட்டது. இதையடுத்து மழைக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே காளிசேகம் ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட, மாறாமலை பகுதியை சேர்ந்த சித்திரைவேல் (39) என்ற தொழிலாளியின் கதி என்ன என்பது தெரியவில்லை. நேற்று 3வது நாளாக அவரை தேடும் பணி நடந்தது.  ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்து வரும்  கனமழை மற்றும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பெரும்பாலான ஏரி,  குளம், குட்டைகள் நிரம்பி வழிகிறது. இந்நிலையில், அரக்கோணம் அடுத்த மின்னல்  கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி குமரேசன் மகன் 9ம் வகுப்பு மாணவன் லோகேஷ்(13), மின்னல் ஆற்றுக்கால்வாயில் நேற்று மதியம் சடலமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல்,  அரக்கோணம் அடுத்த வேலூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராமச்சந்திரன்(43),  ஏரியில் நேற்று முன்தினம்  மீன்பிடிக்க சென்றபோது மூழ்கி பலியானார். நெல்லை: நெல்லை தாமிரபரணியில் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக குறுக்குத்துறை கோயில் சுப்பிரமணிய சுவாமி உற்சவர், மேலகோயிலுக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.

வெள்ளத்தில் சிக்கி குட்டி யானை பலி

குமரி மாவட்டத்தில் பெய்த மழை வெள்ளத்தில் ஏராளமான வன விலங்குகளும் பாதிக்கப்பட்டன. காட்டுப்பன்றிகள், மிளா போன்றவை நீரில் சிக்கி தத்தளித்து கரை ஏறிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் நேற்று காலை பேச்சிப்பாறை அருகே அணைக்கு தண்ணீர் வரும் கோதைமடக்கு நீரோடையில், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு சுமார் 6 மாதமேயான ஆண் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. வனத்துறையினர் யானை குட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்குப்பின் வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.

Related Stories: