தென்காசியில் சென்னை ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: சொந்த ஊருக்கு ஓட்டு போட வந்த போது பரிதாபம்

நெல்லை: ஆலங்குளம்  அருகே சின்னக்கோயிலான்குளம் பகுதியில் சென்னை ஆட்டோ டிரைவர் நேற்று முன்தினம் இரவு  கொலை  செய்யப்பட்டார். இது தொடர்பாக மர்ம நபர்களை ஊத்துமலை போலீசார் தேடி  வருகின்றனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலை பக்கமுள்ள  சின்னக்கோயிலான்குளம், தெற்குத் தெருவைச் சேர்ந்த செல்லத்துரை மகன் இளங்கோவன் (41). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி உமா (35) என்ற மனைவியும்,  தர்ஷினி (8) என்ற மகளும் உள்ளனர். இவர் குடும்பத்துடன் சென்னையில் வசித்து  வந்தார். கொரோனா பரவல் காரணமாக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு  வந்திருந்தார். பின்னர் குடும்பத்தை சொந்த ஊரில் விட்டு விட்டு இளங்கோ மட்டும் சென்னைக்கு சென்று ஆட்டோ ஓட்டி  வந்தார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சொந்த  ஊருக்கு வந்திருந்தார்.

நேற்று முன்தினம் காலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் அதன் பின்னர்  வீடு திரும்பவில்லை. ஊத்துமலை அருகே பலபத்திரராமபுரம் என்ற ஊருக்கு  அடுத்தாற்போல் உள்ள காற்றாலைகள் இருக்கும் பகுதியில் தலையில் சரமாரியான வெட்டுக்  காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஊத்துமலை  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஊத்துமலை இன்ஸ்பெக்டர் சுரேஷ் சம்பவ  இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஊத்துமலை போலீசார் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இளங்கோவனுக்கு  குடி பழக்கம் இருந்ததாகவும், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய போது  ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்த இளங்கோவனை அழைத்து சென்றது யார் என்பது குறித்தும், அவரது செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டவர்கள் குறித்தும் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் ஆலங்குளம், ஊத்துமலை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>