வடகிழக்கு பருவமழையால் போக்குவரத்து தடை, நெரிசல் ஏற்படுவதை தடுக்க தற்காலிக சீரமைப்பு பணிக்காக கூடுதல் பொறியாளர்கள்: நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், போக்குவரத்து தடை மற்றும் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க தற்காலிக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில், தற்காலிகமாக கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவுக்கு கூடுதல் பொறியாளர்களை நியமனம் செய்ய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, அக்டோபர் 20ம் தேதிக்கு பிறகு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பருவமழையின்போது சாலைகளில் மரங்கள் விழுதல், மலைப் பகுதிகளில் மண் சரிவு, வெள்ளப்பெருக்கால் சாலைகள், பாலங்கள் சேதமடைந்து, போக்குவரத்து மற்றும் நெரிசல் ஏற்பட்டு மக்கள் பயணிக்க முடியாத சூழல் எற்படும் வாய்ப்புள்ளது.  

எனவே, அந்த பகுதிகளில் மற்ற அலகுகளில் பணியாற்றும் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர்களை தற்காலிகமாக நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவில் பணியமர்த்த வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு முதன்மை இயக்குனர் குமாருக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து பொறியாளர்கள் பற்றாக்குறை உள்ள கோட்டங்களில் தற்காலிகமாக இளநிலை, உதவி பொறியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளர் சந்திரசேகர் அனைத்து கண்காணிப்பு பொறியாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.

அதில், நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகில் உள்ள உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்களின் பணி விவரங்களை அனைத்து கண்காணிப்பு பொறியாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து அலுவலகங்களில் பெற்று அதனை ஒருங்கிணைத்து அனுப்பி வைக்க வேண்டும். அதில், தற்போது பணிபுரிந்து வருகிறவர்கள் பணிமாறுதல் மூலம் தற்போது பணியில் சேர்ந்தவர்கள் அனைவரின் பெயரும் எவ்வித விடுதல் இன்றி இடம் பெற வேண்டும். காலி பணியிடம் எந்த இடம் மற்றும் எந்த தேதி முதல் காலியாக உள்ளது என குறிப்பிட வேண்டும். ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு உண்டான உதவி பொறியாளர் விவரங்கள் விடுதல் இன்றி நிரப்பப்பட வேண்டும். காலி பணியிடம் எந்த தேதி எந்த இடத்தில் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: