வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை முதல் மக்கள் குறைதீர்வு கூட்டம்.! பல மாதங்களுக்கு பிறகு நடக்கிறது.!

வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் கலெக்டர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடக்க உள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டது. அதன்படி கடந்த 13ம்தேதி முதல் கலெக்டர் அலுவலகங்களில் திங்கட்கிழமைதோறும் நடக்கும் மக்கள் குறைதீர்வு கூட்டம், அரசின் நலன் சார்ந்த திட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்தி கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தது. அதன்காரணமாக இந்த 9 மாவட்டங்களில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் தேர்தல் நடந்து வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் நேற்றுடன் முடிந்துவிட்டதாகவும் விதிகள் அனைத்தும் விலக்கிக் கொள்வதாகவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் மக்கள் குறைதீர்வு கூட்டம், அரசு நிகழ்ச்சிகள் நடத்த தடை நீங்கியது. இதைத்தொடர்ந்து நாளை முதல் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடக்க உள்ளது. பொதுமக்கள் மனுக்களை நேரடியாக கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் அளிக்கலாம். இந்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் பொதுமக்கள் அதிகளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனுக்கள் கொடுக்க வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: